நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி தொடங்கும் அறிவிப்பை வாபஸ் பெற்றதை தொடர்ந்து, அவருக்கு பக்கபலமாகவும், அவர் தொடங்க இருந்த கட்சிக்கு கண்கானிப்பாளராகவும் இருந்த தமிழருவி மணியன், இறப்பு என்னை தழுவும் வரை இனி நான் அரசியலில் ஈடுபட மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் பல கட்ட ஆலோசனைக்கு பிறகு இம்மாத இறுதியில் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கட்சி தொடங்குதற்குள் தான் நடித்து வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட வேண்டும் என படப்பிடிப்பில் தீவிரம் காட்டி வந்தார். ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் ரஜினிகாந்த் தன்னைத்தானே தனிமைபடுத்திக்கொண்டார். ஆனாலும் இரத்த அழுத்த மாறுபாடு காரணமாக இரு தினங்கள் ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த இரு தினங்களுக்குமுன்பு வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று ரஜினிகாந்த் திடீரென, தான் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தனது அறிவிப்பில், நான் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை. அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள் என கூறியுள்ள ரஜினிகாந்த், இது ஆண்டவன் எனக்குகொடுத்த முன்னெச்சரிக்கையாகத்தான் பார்க்கிறேன். என்னை நம்பி வருபவர்களை பலிகா ஆக்க நான் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை தனக்கு துணை நின்ற அர்ஜூன் மூர்த்தி, தமிழருவி மணியன் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று திடீர் அறிவிப்பை வெளியிட்ட தமிழருவி மணியன், இறப்பு என்னை தழுவும் வரை இனி நான் அரசியலில் ஈடுபட மாட்டேன் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது அறிக்கையில்,
என் கல்லூரிப் பருவத்தில் நான் காமராஜர் காலடியில் என் அரசியல் வாழ்வைத் தொடங்கினேன். ஐம்பதாண்டுகளுக்கு மேல் நீண்ட என் அரசியல் வேள்வி அப்பழுக்கற்றது. இரண்டு திராவிட கட்சிகளால் அனைத்து மேலான பொதுவாழ்க்கைப் பண்புகளும் பாழடைந்துவிட்டன. அரசியல் ஊழல் மலிந்த சாக்கடையாகச் சரிந்துவிட்டது.
சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றின் பெயரால் சுய ஆதாயம் தேடும் மலினமான பிழைப்புவாதிகளின் புகலிடமாக அரசியல் களம் மாறிவிட்டது. இங்கே நேர்மறைக்கும், உண்மைக்கும், ஒழுகத்திற்கும் எள்ள்ளவும் மதிப்பில்லை. நான் ஒருபோதும் அறத்திற்குப் புறம்பாக வாழந்ததில்லை. எவரிடத்தும் எந்த நிலையிலும் கையேந்தியதில்லை.
இன்றும் என் வாழ்க்கை சாதாரண வாடகை வீட்டில் தான் நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் நலன் சார்ந்த ஒரு மேன்மையான மாற்று அரசியல் இந்த மண்ணில் மலரவேண்டும்; மீண்டும் காமராஜர் ஆட்சியை தமிழகம் தரிசிக்க வேண்டும் என்ற என் கனவை நனவாக்கத் தொடர்ந்து முயன்றது தான்தான் செய்த ஒரே குற்றம்.
இதற்காக மலினமாக மனநோயாளிகளின் தரம் தாழ்ந்த விமர்சனக் கனைகள் என்மீது வீசப்படுவதால் என் மனைவி மக்களின் மனங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுவிட்டன.
மாணிக்கத்திற்கும் கூழாங்கற்களுக்கும் பேதம் தெரியாத அரசியல் உலகில் இனி நான் சாதிக்க ஒன்றும்இல்லை. என் நேர்மையும், தூய்மையும் வாழ்வியல் ஒழுக்கமும் போற்றப்படாதஅரசியல் களத்திலிருந்து முற்றாக நான் விலகி நிற்பதே விவேகமானது. எந்தக் கைம்மாறும் கருதாமல் சமூக நலனுக்காக என்னுடன் கைகோர்த்து நடந்த காந்திய மக்கள் இயக்க நண்பர்களின் அடி தொழுது நான் விடை பெற்றுக்கொள்கிறேன். இறப்பு என்னைத் தழுவும் இறுதிநாள் வரை நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்கமாட்டேன்.
தி.மு.க.விலிருந்து விலகும்போது கண்ணதாசன் போய் வருகிறேன் என்றார்.நான் போகிறேன் வரமாட்டேன் என தெரிவித்துள்ளார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Not get involved in politics until death embraces tamilruvi maniyan statement
சாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்
ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
ஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்