Cyclone Nivar : நிவர் புயல் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை காரைக்கால் - மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. தமிழகம், புதுவை, மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 24ம் தேதி அதிகாலையில் இருந்து பெய்ய துவங்கிய கனமழை காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளின் பெரும்பாலான இடங்களில் வெள்ளநீர் புகுந்து மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளில் தமிழக கடற்கரை மாவட்டங்களை பல்வேறு புயல்கள் புரட்டி போட்டுள்ளன. கடந்த 12 ஆண்டுகளில் தமிழகத்தை தாக்கிய, அல்லது மாற்றங்களை உருவாக்கிய புயல்கள் என்னென்ன? விளக்குகிறது இந்த கட்டுரை.
நிஷா
2008ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி வங்கக் கடலில் உருவான குறைந்த அழுத்த தாழ்வு மண்டலம், நிஷா புயலாக உருவெடுத்தது. நிஷாவின் காரணமாக 12 மாவட்டங்களில் 20 நாட்களுக்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இயற்கை பேரிடரை ஏற்படுத்திய இந்த புயலில் சிக்கி 170 பேர் மரணம் அடைந்தனர்.
2010ம் ஆண்டில் தென்சீன கடலில் உருவானது ஜல் புயல்.
தானே
இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் மாபெரும் சேதத்தை ஏற்படுத்திய முதல் புயலாக அமைந்தது தானே புயல். 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் தேதி வங்கக் கடலில் உருவானது இந்த தானே புயல். மரங்கள், படகுகள், கடற்கரை கிராமங்கள் அனைத்தையும் ஒன்றும் அற்றதாக மாற்றிவிட்ட சென்றது தானே புயல். இதில் சிக்கி 45 பேர் மரணத்தை தழுவினர்.
நீலம்
2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ம் தேதி அன்று ஏற்பட்டது நீலம் புயல். தாழ்வான பகுதிகளில் வாழ்ந்து வந்த ஒன்றரை லட்சம் நபர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மீண்டும் ஒரு பேரழிவை சந்தித்தது கடற்கரை மாவட்டங்கள். 20க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் இதனால் முழுமையாக பாதிப்படைந்தது.
வர்தா
புயல் எச்சரிக்கை என்றால் அது சென்னைக்கு வரவே வராது என்ற எண்ணத்தை தகர்த்து தலைநகர்வாசிகளை ஸ்தம்பிக்க வைத்தது தான் வர்தா. 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 06ம் தேதி அன்று இந்த புயல் தலைநகரை தாக்கியது. ரூ. 1000 கோடிக்கும் மேலான பலத்த சேதாரத்தை ஏற்படுத்தியது இந்த புயல். மின் இணைப்பு, பொது போக்குவரத்து, தொலைத்தொடர்பு என அனைத்தையும் முற்றிலும் இழந்து இருளில் மூழ்கியது சென்னை மாநகரம்.
ஒக்கி
இலங்கைக்கு அருகே வடக்கு இந்திய பெருங்கடலில் உருவானது ஒக்கி புயல். 2017ம் ஆண்டு நவம்பர் 29 அன்று ஒக்கி புயல் கேரளா - கன்னியாகுமரிக்கு அருகே கரையை கடந்தது. இதில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்தனர். குமரி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற பல மீனவர்களின் நிலை என்ன ஆனது என்று இன்று வரை தெரியவில்லை.
கஜா
2018ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி கஜா புயல் நாகையின் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. இந்த புயலில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்தனர். புயல் நிவாரண பொருட்களை கொண்டு சேர்க்க இயலாத வகையில் சாலைகளில் மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டு சாய்ந்து கிடந்தன. அப்பகுதியில் இருந்த தென்னை விவசாயிகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது கஜா புயல்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil