உதயநிதி ஸ்டாலின் திமுக கட்சியில் இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தமிழகத்தில் ஒருவர் திமுகவில் இருந்தால் அவரின் குடும்பமே அக்கட்சியில் இணையும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அப்படி தான் உதயநிதி ஸ்டாலினும் திமுகவில் இருக்கிறார் என்று திமுக கட்சித் தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
கருணாநிதி குடும்பத்தில் இருக்கும் அனைவரும் திமுக கட்சியில் முக்கிய அங்கம் வகிப்பதையும், தேர்தலில் போட்டியிடுவதையும், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என முக்கிய பங்கினை வகிக்கிறார்கள் என்பது நாம் அறிந்த ஒன்று.
உதயநிதி ஸ்டாலின் அரசியல் நகர்வு
கருணாநிதிக்குப் பிறகு திமுகவின் தலைமைப் பொறுப்பை தற்போது முக. ஸ்டாலின் பெற்றார். ஆனால் அந்த இடத்தை அடைய அவர் ஆற்றிய களப்பணிகள் மிகவும் பெரியது. 50 ஆண்டு கால காத்திருப்பு மற்றும் கட்சிக்காக ஆற்றிய பணியினால் அவர் இந்த இடத்தை அடைந்திருக்கிறார். ஆனால் உதயநிதி என்று வரும் போது “குடும்ப அரசியலுக்கும் வாரிசு அரசியலுக்கும் பெயர் பெற்றது திமுக” என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
திமுக தலைவர் ஸ்டாலின் ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் ”உதயநிதி அரசியலில் நுழையவில்லை. அவர் ஏற்கனவே அரசியலில் தான் இருக்கிறார். ஒருவர் திமுகவில் இருக்கிறார் என்றால் அவரின் மொத்த குடும்பமும் திமுகவில் தான் இருக்கும் என்றும் திமுக வாழையடி வாழையாக வளர்ந்து வரும் ஒரு அமைப்பு என்பதால் அதில் உதயநிதி ஸ்டாலின் இருப்பதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்று ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.