தி.மு.க. எம்.பி. ஆ.ராசா தீண்டாமை குறித்து பேசியது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.
அதற்குப் பதிலளித்த சீமான், “அண்ணன் ஆ. ராசா பேசியது அவர் சொந்தக் கருத்தா? பல ஆண்டுகளாக எங்கள் மீது வேசிமகன், சூத்திரன் என நீங்கள் பேசி எழுதி வைத்திருந்ததைதான் அவர் சுட்டிக் காட்டினார்.
அவர் தனது சொந்தக் கருத்தை கூறவில்லை. நீங்கள் எழுதி வைத்திருப்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். தீண்டாமை என்று ஒன்று இருந்ததைதான் அவர் பேசியுள்ளார்.
பல ஆண்டுகளாக வலியை சுமந்த ஒரு மகனின் வலிதான் ஆ. ராசாவின் மொழி. ஆக, அவர் அனைவருக்காகவும் தான் பேசியுள்ளார்.
இதை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பெரியார் பேசியுள்ளார். கடைசி பொதுக்கூட்டத்தில் கூட வருத்தத்தில் பதிவுச் செய்தார். உங்களை இவ்வாறு இழிவுடன் எழுதி வைத்துள்ளான் என்றார். நாட்டின் முதல் குடிமகன் ராம்நாத் கோவிந்த்துக்கு கூட அவமதிப்பு நிகழ்ந்ததே.
அப்போது நீங்கள் எங்கே சென்றீர்கள். பிராமணன் தலையில் இருந்தும், சத்ரியன் தோளில் இருந்து பிறந்தான், வைசியன் தொடையில் இருந்து பிறந்தான், சூத்திரன் காலில் இருந்து பிறந்தான் என எழுதியிருக்கிறான்.
பஞ்சமன் என்று ஒருத்தன் இருந்தான். அவன் யார், எங்கிருந்து பிறந்தான் என பாரதியிடம் கேட்ட போது, அவன் ஒரு தாய் தகப்பனும் பிறந்தவன் எனப் பதில் அளித்தார்.
அந்த ஒரு தாய் தகப்பனும் பிறந்தவர்கள் கூறுகிறோம். ஆ. ராசா எங்கள் அண்ணன். அவர் மீதான மதவாதிகளின் தாக்குதலை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்றார்.
அண்மையில் தீண்டாமை குறித்து ஆ. ராசா பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையாகின. இந்த விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக எம்.பி., ஆ. ராசாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“