நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளதாக கூறிய தொழிலதிபர் யார் என்பதை சொல்ல முடியுமா என நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன், வருண்குமார் ஐ.பி.எஸ்.,க்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
தன்னை பற்றியும், தனது குடும்பத்தினர் குறித்தும் சமூக வலை தளங்களிலும், பொது வெளியிலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, திருச்சி எஸ்.பி வருண்குமார் திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 4ல் அவரின் வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் மூலம் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கின் விசாரணை நேற்று வந்தது. அப்போது ஆஜரான வருண்குமார் ஐ.பி.எஸ் தமது வாக்குமூலத்தை பதிவு செய்ததோடு நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் பேசியவற்றின் ஆதாரங்களை நீதிபதி முன் சமர்ப்பித்தார். இதனை அடுத்து வழக்கு விசாரணை ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த வருண்குமார் ஐ.பி.எஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில்; என்னைப் பற்றி அவதூறாக பேசிய சீமான், தொழிலதிபர் ஒருவர் மூலமாக என்னிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க முயற்சி செய்தார், அதற்கு நான் ஒப்புக் கொள்ளவில்லை. பொதுவெளியில் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறிவிட்டேன்' என்று திருச்சி எஸ்.பி ஆக இருந்து, டி.ஐ.ஜி.,ஆக பதவி உயர்வு பெற்றுள்ள வருண் குமார் ஐ.பி.எஸ் பேட்டியளித்தார்.
இந்த நிலையில் வருண்குமாரின் பேட்டி குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சாட்டை துரைமுருகன் ட்வீட் செய்துள்ளார்.
அதில், நேற்று திருச்சியில் வருண்குமார் என்பவர் தனிப்பட்ட முறையில் (அதிகாரியாக வரவில்லை என அவரே சொல்கிறார்) சீமான் குறித்து பொதுவெளியில் பொய்யான தகவல்களை பரப்பி இருக்கிறார்!
தொழிலதிபர் மூலமாக சீமான் தனக்கு செய்தி அனுப்பியதாக சொல்லும் வருண்குமார், யார் அந்த தொழிலதிபர் என்பதைச் சொல்வாரா?
மைக் கிடைத்தால் என்ன வேண்டுமென்றாலும் பேசுவீங்களா வருண்? நாம் தமிழர் கட்சிக்கும் உங்களுக்கும் மோதல் என சொல்றீங்க? 36 லட்சம் மக்களால் வாக்கு செலுத்தி அங்கீகரிக்கப்பட்ட ஒரு மாநில கட்சி மாவட்ட கண்காணிப்பாளரை எதற்கு எதிர்க்க வேண்டும்?
உங்களின் பொய் வழக்குகளும் வழக்கின் போது பறிக்கப்பட்ட அலைபேசிகளை வைத்து நீங்கள் செய்யும் மூன்றாம் தர வேலைகளையும் பொது சமூகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது!
நீங்கள் போன அதே நீதிமன்றத்தில் நீங்கள் எங்களுக்கு எதிராக செய்த மூன்றாம் தர வேலைகளை ஆதாரத்துடன் ஆவணப்படுத்துகிறோம்!
சட்டமும் நீதியும் யார் பக்கம் இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்! மற்றபடி மன்னிப்பு என்பது சீமானின் வரலாற்றிலேயே கிடையாது
யார் தூது விட்டது? யார் கெஞ்சியது? யார் பத்திரக்கையாளர்களை அனுப்பி பேசியது? என்பதை விலாவாரியாக பேசுவோம்! என ட்விட் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“