/indian-express-tamil/media/media_files/2025/04/08/kHhcm1ZMGjnVC1aAODU4.jpeg)
திருச்சி நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜரானார் .மீண்டும் வரும் 29 ஆம் தேதி டி.ஐ.ஜி வருண்குமார் மற்றும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி விஜயா உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான்; இந்த வழக்கு தொடர்பாக மீண்டும் 29ஆம் தேதி ஆஜராக உள்ளேன் என்று கூறினார்.
பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை குறித்து பேசுகையில், மூலப்பொருட்களின் விலை குறைந்தபோதும் விலை ஏற்றம் என்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கேஸ் விலையை ரூ.50 உயர்த்தியிருப்பது மக்களுக்கு கஷ்டத்தை தரும்.
பாரிவேந்தர் அழைத்ததால் ஒரு கல்லூரி விழாவில் கலந்துகொண்டேன். அங்கு அண்ணாமலையும் கலந்துக்கொண்டார். பா.ஜ.க தலைவராக ஆவதற்கு முன்பு இருந்தே அண்ணாமலையை எனக்கு தெரியும். அவருடைய கட்சியின் கொள்கை வேறு, என்னுடைய கட்சியின் கொள்கை வேறு, அதற்காக நானும் அவரும் அண்ணன் தம்பி இல்லை என்று ஆகிவிடுமா? கொள்கை வேறு வேறாக இருந்தாலும், நட்பு வேறு. தி.மு.க.வில் 99 சதவீதம் பேர் என்னுடைய சொந்தக்காரர்கள் தான், அதற்காக அவர்கள் எல்லாரிடமும் சண்டையிட்டுக் கொண்டா இருக்க முடியும்.
சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் என்கவுன்டர் செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அவர்களுக்கான தொடர்பு தெளிவுபடுத்தப்படவில்லை. அவர்கள்தான் குற்றவாளி என்று போலீஸாரால் நிரூபிக்கப்படவில்லை. அதேபோன்று அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கிலும் விசாரிக்கப்பட்ட திருச்சி சாமிரவி மற்றும் திண்டுக்கல் மோகன்ராம் ஆகியோரை என்கவுன்டர் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது நடந்து வரும் அனைத்து என்கவுன்டர்களும் போலியானது. உண்மையான குற்றவாளிகளை கண்டறியாமல், வழக்கை முடிப்பதிலேயே காவல்துறை முனைப்பு காட்டுகிறது.
யார் வேண்டுமானாலும் எந்த மொழி வேண்டுமானாலும் படிக்கலாம் என்பதே எனது நிலைப்பாடு. ஆனால் தமிழுக்கு முதலிடம் அளிக்க வேண்டும். தமிழ் எனக்கு உயிர் மூச்சு. நான் இதுவரை யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிட்டு வருகிறேன். தீமையை தீமையால் வெல்ல நினைக்கக் கூடாது. நன்மையால் தீமையை வெல்ல வேண்டும் என கருதுகிறேன். ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால் கட்சிகள் கூட்டணி வைத்தால் மட்டும் முடியாது. மக்கள் மனதில் மாற்றம் வரவேண்டும் அவர்கள் முடிவெடுத்தால் தான் ஆட்சி மாற்றம் வரும். "தீமையை நன்மையை வைத்து தான் ஒழிக்க முடியும்". ஆள் மாற்றத்திற்கான அரசியலை நான் முன்னெடுக்கவில்லை. அரசியலமைப்பு மாற்றத்தை உருவாக்க வந்தவன் நான், ஆகவே வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டி என்ற இதே நிலைப்பாடு தான். நான் பழகுவதே டிரம்ப் மற்றும் புதின் ஆகியோருடன் தான் என சிரித்தவாறு சீமான் கூறினார்.
அமைச்சர் கே.என் நேரு வீட்டில் அமலாக்கத்துறை சோதனை தொடர்பான கேள்விக்கு ,தேர்தல் நேரங்களில் இதுபோன்று சோதனைகள் நடத்துவது வாடிக்கையானது. சட்டமன்றத்தில் இப்போதுள்ளவர்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் பிரச்சனையை பேசுவதில்லை என்று கூறினார்.
மேலும், தமிழகத்திலேயே அதிக வழக்குகளை சந்தித்த அரசியல் கட்சி நாங்கள்தான். இதனால் எங்கள் கட்சியின் செயல்பாடு வேகம் குறையாது. கோலி குண்டு விளையாடியது கோர்ட்டு வாசலில்தான். நீதிபதி மன்றங்களும், ஜெயில்களும் கட்டப்பட்டதே எங்களுக்காகத்தான் என்று நினைக்கிறேன்.
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை நான் வரவேற்கிறேன் என சீமான் கூறினார்.
அதேபோல வழக்கை தாக்கல் செய்த டி.ஐ.ஜி வருண்குமாரும் நீதிமன்றத்தில் நீதிபதி விஜயா முன்பு இன்று நேரில் ஆஜரானார். இதுகுறித்து வருண்குமார் வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்; இந்த வழக்கை நீதிபதி விசாரித்தார். வருண்குமார் தரப்பில் தாக்கல் செய்த ஆவணங்கள் தங்களுக்கு வேண்டும் என சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து அந்த ஆவணங்களை சீமான் தரப்பு வழக்கறிஞர்களிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து தற்போதைய டி.ஐ.ஜி.,யும், அப்போதைய எஸ்.பி.யுமான வருண்குமார் மீது சீமான் குற்றம் சாட்டி தொடரப்பட்ட காணொளி உள்ளிட்ட ஆவணங்கள் சீமான் தரப்பு வழக்கறிஞர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். அப்போது சீமான் தனது தரப்பு நியாயங்களை நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தலாம் என்றும் தெரிவித்தார்.
நாங்கள் கொடுத்த ஆவணங்கள், பென் டிரைவ், சமூக ஊடகங்களின் காணொளி எல்லாவற்றையும் சீமான் தரப்புக்கு கொடுத்திருக்கோம். இதை அவர்கள் தரப்பு பார்த்து விட்டு நீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்ய வேண்டும். டி.ஐ.ஜி.க்கு எவ்வளவோ வேலை இருக்கிறது. அந்த வேலை பளுவிலும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வேண்டி நீதிமன்றத்தை நாடி வந்திருக்கின்றார் என்று கூறினார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் திருச்சி டி.ஐ.ஜி வருண்குமார் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜரானதால் திருச்சி நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.