Advertisment

ஒற்றை பனைமரம் திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோம்: சீமான் எச்சரிக்கை

"தாய் மண்ணின் விடுதலைக்குப் போராடி தங்கள் இன்னுயிரை இழந்த மாவீரர்களின் ஈகத்தைக் கொச்சைப்படுத்தும் யாதொரு பொய்ப்பரப்பரையையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது." என்று சீமான் கூறியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
NTK leader Seeman condemns Otrai Panai Maram movie and not screen in TN Theatres Tamil News

"ஈழத்தாயக விடுதலைப்போராட்டத்தை இழிவுபடுத்தும் 'ஒற்றை பனைமரம்' திரைப்படம் தமிழ் மண்ணில் திரையிட அனுமதிக்கக்கூடாது." என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

Advertisment

ஈழத்தாயக விடுதலைப்போராட்டத்தை இழிவுபடுத்தும் 'ஒற்றை பனைமரம்' திரைப்படம் தமிழ் மண்ணில் திரையிட அனுமதிக்கக்கூடாது. ஈழத்தாயக விடுதலைப்போராட்டத்தை இழிவுபடுத்தும் விதமாக 'ஒற்றை பனைமரம்' திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

தாய் மண்ணின் விடுதலைக்குப் போராடி தங்கள் இன்னுயிரை இழந்த மாவீரர்களின் ஈகத்தைக் கொச்சைப்படுத்தும் யாதொரு பொய்ப்பரப்பரையையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஈழத்தில் நடைபெற்றது வெறும் வன்முறை வெறியாட்டம் அல்ல; உலகத்தமிழர் உணர்வோடும், உயிரோடும் இரண்டற கலந்துவிட்ட விடுதலைப்போராட்டம். ஈழத்தில் வாழ்ந்த தொப்புள்கொடி உறவுகள் வன்முறையின் மீது தீராக்காதல் கொண்டு மனநோயாளிகள் போல ஒரே நாளில் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபடவில்லை.

இனவெறி சிங்களவர்களின் இனவழிப்பு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு, தமிழர் அடிப்படை உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு இனி தங்கள் தாய் மண்ணில் வாழவே முடியாது என்ற கொடுஞ்சூழல் ஏற்பட்ட பிறகு முதலில் தொடங்கப்பட்டது தந்தை செல்வா தலைமையில் அகிம்சை போராட்டம்தான். 30 ஆண்டுகாலம் இனவாத இலங்கை அரசின் கொடும் அடக்குமுறைகளால் ஒடுக்கப்பட்டு தோல்வியடைந்த பிறகு, வேறுவழியின்றிதான் தமிழினத்தலைவர் வே.பிரபாகரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப்போராட்டம் என்பது இனவெறி இலங்கை அரசால் தமிழர்களின் மேல் திணிப்பட்ட ஒன்றாகும்.

எதிரி எந்த மொழியில் பேசுகிறானோ அதே மொழியில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தமிழர்கள் தள்ளப்பட்டனர் என்பதே வரலாற்றுப் பேருண்மை. போராடினாலும் சாவோம்; போராடாவிட்டாலும் சாவோம்! ஆனால் போராடினால் ஒருவேளை வாழ்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்ற காரணத்தாலேயே அடிமை வாழ்வினை விட உரிமைச்சாவு மேலானது என்ற உன்னதக் கோட்பாட்டை ஏற்றே எம்மினச்சொந்தங்கள் ஈழத்தில் போராடி இன்னுயிரை ஈந்தனர்.

கடந்த 2009-ம் ஆண்டு இருபது நாடுகள் கூடி தமிழீழத்தில் நிகழ்த்திய இனப்படுகொலைக்கு நீதி கேட்டு இன்றளவும் தமிழினம் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், மண் விடுதலைக்குப் போராடி வீரக்காவியங்களான மாவீரர்த்தெய்வங்களை இழிவுபடுத்தவோ அல்லது அவதூறு பரப்புவோ முயலும் எந்தவொரு படைப்பையும் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என எச்சரிக்கிறேன்.

ஆகவே, ஈழவிடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் 'ஒற்றை பனைமரம்' திரைப்படத்தை தமிழ் மண்ணில் திரையிடக்கூடாது என திரையரங்க உரிமையாளர்களுக்கு நாங்கள் அன்புடன் கோரிக்கை வைக்கிறோம். இத்திரைப்படத்தைத் திரையிடக்கூடாது என திரையரங்கங்களை முற்றுகையிட்டு போராடும் நிலைக்கு எங்களைத் தள்ளமாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம். மேலும், தமிழ்நாடு அரசு இதனை உடனடியாகக் கவனத்தில் எடுத்து, தேவையற்ற சட்டம்-ஒழுங்கு சீர்கெடாமல் இருப்பதற்கு இத்திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிடவிடாமல் தடுக்குமாறு இவ்வறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறேன்." என்று அதில் கூறியுள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Seeman Naam Tamilar Katchi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment