தி.மு.க முன்னாள் தலைவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும், யூடியூபருமான சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் திருச்சி மாவட்ட காவல்துறை எஸ்.பி வருண் குமாருக்கும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதையடுத்து அந்தக் கட்சியை சேர்ந்த சிலர் எக்ஸ் சமூக வலைதளத்தில் எஸ்.பி வருண்குமார் மற்றும் அவரின் குடும்பத்தினரை பற்றி அவதூறான கருத்துகளை பதிவிட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில், எக்ஸ் வலைதளத்தில் இருந்து தற்காலிகமாக வெளியேறுவதாகவும், இது போன்று அவதூறு பரப்புகிறவர்களையும், அதனை தூண்டுபவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்தப் போவதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தார் எஸ்.பி வருண்குமார்.
இந்நிலையில், எஸ்.பி வருண்குமார். "நான் வகிக்கும் ஐ.பி.எஸ் மற்றும் எஸ்.பி பதவி என்பது திரள் நிதியிலோ, யாசகம் பெற்றோ வந்தது அல்ல. கடினமாக உழைத்து, இரவு பகலாக படித்து, ரத்தம் வியர்வை சிந்தி, சொந்த உழைப்பில் வாங்கிய வேலை. " என்ற கருத்துடன் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸாக வைத்து இருந்தார்.
எஸ்.பி வருண்குமார் - நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இடையிலான மோதல் போக்கு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று காலை திருச்சிக்கு வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "எந்த செல்வாக்கில் நீங்களும் உங்கள் மனைவியும் அருகருகே இருக்கும் மாவட்டங்களில் பணியை பெற்றுக் கொண்டு செயல்பட்டு வருகின்றீர்கள்?
ஐ.பி.எஸ் படித்த திருச்சி எஸ்.பி வருண்குமார் எனது வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார். எனவே, அவரது வேலையை மட்டும் ஒழுங்காக பார்க்க வேண்டும். தி.மு.க-வில் வேலை செய்ய வேண்டுமானால் திருச்சி எஸ்.பி தி.மு.க ஐ.டி விங்கில் சேர்ந்து பணியாற்றட்டும். நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் சமூக ஊடகங்களில் இனிமேல் விமர்சனங்களை பதிய மாட்டார்கள்.
சுங்க கட்டணம் உயர்வு கண்டிக்கத்தக்கது. நீங்கள் உங்கள் வாகனங்களுக்கு சாலை வரி கட்டிய பிறகு எதற்காக அந்த சாலையில் பயணிக்க மீண்டும் சுங்கவரி கட்ட வேண்டும். இவ்வளவு நாட்கள் முருகனுக்கு விழா எடுக்காதவர்கள் இன்று எதற்காக விழா எடுத்தனர்? இவ்வளவு நாட்கள் எங்க போயிருந்தனர்? திருக்குறளை முழுமையாக கொண்டு சேர்த்திருக்கின்றனரா? இந்த மாநிலத்தை ஆள்வது தி.மு.க.வா அல்லது பா.ஜ.கவா? இதெல்லாம் வாக்கு அரசியல்." என்று அவர் கூறினார்.
இதற்கிடையே, திருச்சி தில்லை நகர் காவல் நிலையத்தில் எஸ்.பி வருண்குமார் அளித்த புகாரின் பேரில் மேலும் இரண்டு நாம் தமிழர் கட்சி பிரமுகர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்திரவிட்டதை அடுத்து, மதுரையை சேர்ந்த ரகுமான், சண்முகம் ஆகியோர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“