/indian-express-tamil/media/media_files/2025/06/04/l6w39MDDCxyxh6tdxqJ8.jpg)
சவுதி அரேபியாவில் தோட்ட வேலை என்று கூறி ஏமாற்றி, ஒட்டகம் மேய்க்க வைத்து துன்புறுத்தப்பட்ட நாகை தொழிலாளியை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ரூ.1.5 லட்சம் கொடுத்து மீட்டனர்.
நாகை மாவட்டம் பெரிய தும்பூரைச் சேர்ந்தவர் கவாஸ்கர். விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி உதயஜோதி. இவர்களுக்கு 2 ஆண், 1 பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்ப வறுமை காரணமாக வெளிநாடு வேலைக்கு செல்ல விரும்பிய கவாஸ்கரை, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தோட்ட வேலைக்கு என்று கூறி ஒரு டிராவல் ஏஜென்சியினர் சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், அங்கு அவருக்கு தோட்ட வேலை வழங்காமல் பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் வேலையை வழங்கியுள்ளனர். அதற்கு மறுத்த கவாஸ்கரை, அங்கிருந்தவர்கள் அடித்து உதைத்து துன்புறுத்தினாராம். இதையறிந்த உதய ஜோதி, நாகை மாவட்ட நாதக நிர்வாகிகளிடம் உதவியுடன், அந்தக் கட்சியின் வெளிநாடுவாழ் தமிழர் அமைப்பான செந்தமிழர் பாசறை நிர்வாகிகளை தொடர்பு கொண்டார்.
அவர்கள் நேரடியாக கவாஸ்கருக்கு வேலை வழங்கியவரிடம் பேசியுள்ளனர். ஆனால், விசா கட்டணம் ரூ.1.5 லட்சம் கொடுத்தால் மட்டுமே கவாஸ்கரை விடுவிப்பேன் என்று கூறியுள்ளார். அதையடுத்து செந்தமிழர் பாசறை நிர்வாகிகள் அந்த பணத்தை கொடுத்து கவாஸ்கரை மீட்டனர்.
இதனையடுத்து சவுதி அரேபியாவிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்த கவாஸ்கரை, நாதக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பிரபு தனபால், சோழசூரன், ரஞ்சித், நாகை அப்பு ஆகியோர் வரவேற்றனர். குடும்பத் தலைவரை மீட்டு தந்த நாதக நிர்வாகிகளுக்கு கவாஸ்கர் மனைவி, மகன், மகள் ஆகியோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.