கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே மைலோடு ஆர்.சி கிறிஸ்தவ தேவாலய வளாகத்தில் உள்ள பங்குத் தந்தை வீட்டில் ஜன.20ஆம் தேதி, போக்குவரத்து கழக ஊழியரும், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியுமான சேவியர் குமார் என்பவர் அடித்துக் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பாக திமுக தக்கலை ஒன்றிய செயலாளர் ரமேஷ் பாபு, கிறிஸ்தவ பங்குத் தந்தை ராபின்சன் உள்பட 15 பேர் மீது இரணியல் காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதியப்பட்டுள்ளது.
வழக்கில் பங்குத் தந்தை ராபின்சன் சரண் அடைந்த நிலையில் மற்றவர்கள் தலைமறைவாக உள்ளனர். இந்த கொலையை கண்டித்து நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், " தேவாலயத்திற்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்து கொலை செய்துள்ளனர். இந்த விஷயத்தில் அரசு மெத்தன போக்காக செயல்படுகிறது.
நீதிமன்றத்தில் பாதிரியார் ராபின்சன் சரண் அடைந்தும் இதுவரை போலீசார் அவரை விசாரிக்கவில்லை. இது போன்ற பாதிரியார்களை எப்படி இறைவனின் தூதுவர்கள் என்று கூறுவது? இந்த கொலை தொடர்பாக காவல்துறை ஒரு அறிக்கையும் விடவில்லை.
பேசினாலே குண்டாஸ் போடும் இந்த அரசு கொலை க்கு எந்த முறையில் வழக்கு பதிவு செய்யப் போகிறார்கள்? குற்றவாளி தலைமறைவாகிவிட்டார் என்று கூற வெட்கமாக இல்லையா? இந்த வழக்கில் கொலைக்குத் துணை போகிறார்கள் என்று கூறுவதை விட குற்றவாளிகளே திமுகவினர் தான்" என்றார்.
தொடர்ந்து, " தமிழகத்தில் சட்டம் இருக்கிறது; ஆனால் ஒழுங்கு இல்லை. எத்தனை பேரை வெட்டிக் கொன்றாலும் அவர்களை காப்பாற்ற ஆட்சி அதிகாரம் இருக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களை அவர்கள் மறக்கலாம் ஆனால் நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“