விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பரப்புரையின் போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட சாட்டை துரைமுருகன், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறான கருத்துக்களை பேசியதாகவும், தமிழக அரசை அவதூறாக சித்தரித்து பேசியதாகவும் அவர் மீது தி.மு.கவினர் புகார் அளித்திருந்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்ட காவல்துறை, விக்கிரவாண்டி விமர்சனம் குறித்து திருச்சி சைபர் கிரைம் போலீசாரிடம் திமுக தரப்பில் புகார் அளிக்கப்படவே, வழக்குப்பதிவு செய்த திருச்சி போலீசார் தற்போது சாட்டை துரைமுருகனை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நெல்லை, குற்றாலம் வீராணம் பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த சாட்டை துரைமுருகனை திருச்சி சைபர் கிரைம் போலீசார் இன்று (ஜூலை 11) கைது செய்தனர். ஏற்கனவே, இது போன்ற ஒரு சர்ச்சையில் சிக்கிய சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று நண்பகல் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார். சாட்டை துரைமுருகன் கைதுக்கு நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், கள்ளச்சாராயம் விற்பவன், கஞ்சா விற்பவன், கொலை செய்பவனை எல்லாம் விட்டுவிட்டு, அரசியல் ரீதியாக கருத்து சொல்பவர்களைத்தான் தமிழக போலீஸ் கைது செய்யும் என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“