2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேதாரண்யம் தொகுதி வேட்பாளராக இடும்பாவனம் கார்த்திக் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான அரசு ஆட்சி நடத்தி வருகிறது. தி.மு.க ஆட்சியின் பதவி காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனையடுத்து புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் இப்போதே பணிகளை தொடங்கியுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரையில், தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க கூட்டணி, தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவ வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் முதல் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் வேதாரண்யம் தொகுதி வேட்பாளராக இடும்பாவனம் கார்த்திக் அறிவிக்கப்பட்டுள்ளார்.
வேதாரண்யம் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இடும்பாவனம் கார்த்திக் நாம் தமிழர் கட்சியில் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளராக உள்ளார். நாம் தமிழர் கட்சியில் சீமானின் நம்பிக்கை பெற்ற இளம் தலைவர்களில் ஒருவராக இடும்பாவனம் கார்த்திக் வலம் வருகிறார். இப்படியான சூழலில் நாம் தமிழர் மட்டுமின்றி தமிழக சட்டசபை தேர்தலுக்கான முதல் வேட்பாளராக அவரது பெயர் வெளியாகி உள்ளது.
வேதாரண்யம் சட்டசபை தொகுதியை எடுத்து கொண்டால் கடந்த 1962ம் ஆண்டு முதல் 2021 வரை மொத்தம் 14 சட்டசபை தேர்தல் நடந்துள்ளது. இதில் அதிகபட்சமாக தி.மு.க 6 முறையும், காங்கிரஸ் கட்சி 4 முறையும், அ.தி.மு.க 4 முறையும் வெற்றி பெற்றுள்ளது. சமீபத்திய தேர்தல் முடிவுகளை பார்த்தால் கடந்த 2011 முதல் 2021 வரை தொடர்ந்து அ.தி.மு.க தான் வெற்றி பெற்று வருகிறது.
கடந்த 2011ல் அ.தி.மு.க சார்பில் என்வி காமராஜ், 2016, 2021ல் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் ஆகியோர் வெற்றி பெற்றனர். தற்போது வேதாரண்யம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் தான் உள்ளார். கடந்த 2021 தேர்தலில் அ.தி.மு.க.,வின் ஓ.எஸ் மணியன் மொத்தம் 78,719 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.,வின் எஸ்.கே வேதரத்தினம் 66,390 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். இதனால் ஓ.எஸ் மணியன் 12,329 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி 3ம் இடம் பிடித்தது. நாம் தமிழர் கட்சி சார்பில் கே.ராஜேந்திரன் வேட்பாளராக களமிறங்கினார். அவர் மொத்தம் 9,106 ஓட்டுகளை பெற்று தோல்வியடைந்தார். இந்நிலையில் தான் வரும் 2026 சட்டசபை தேர்தலையொட்டி வேதாரண்யம் சட்டசபை தொகுதியின் நாம் தமிழர் வேட்பாளராக இடும்பாவனம் கார்த்திக் களமிறக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் தென்காசி சட்டமன்றத் தொகுதிக்கும் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக டாக்டர் கௌசிக் பாண்டியன் போட்டியிடுவார் என சீமான் அறிவித்திருக்கின்றார். கௌசிக் பாண்டியன் ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் விருதநகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றவர்.
தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை, தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுகாலம் இருக்கும் தருவாயில் தமிழக அரசியல் வரலாற்றில் ஓராண்டுக்கு முன்னரே வேட்பாளர்களை மக்களுக்கு அடையாளம் காட்டும் கட்சியாக நாம் தமிழர் கட்சி செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்