Advertisment

கள்ளச் சாராய மரணத்திற்கு ரூ.10 லட்சம்; மருத்துவர் உயிரிழந்தால் இப்படியா? இதுவா சமூக நீதி?: சீமான் காட்டம்

எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது தங்கை திவ்யாவுக்காக முதலைக் கண்ணீர் சிந்திய ஸ்டாலின், முதல்வரான பிறகு கோரிக்கைப் பெட்டியை சாவியோடு தொலைத்துவிடுவதற்குப் பெயர்தான் திராவிட மாடல்- சீமான்

author-image
WebDesk
New Update
Pongal greeting poster Coimbatore Nam Tamilar cadre attacked Seeman condemns Tamil News

கரோனோ பெருந்தொற்றுப் பணியின்போது உயிரிழந்த 11 அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியும், அரசுப்பணியும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைச் சிறிதும் மனச்சான்று இன்றி திமுக அரசு ஏற்கமறுப்பது அதைவிடவும் பெருங்கொடுமையாகும் என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். 

Advertisment

இதுதொடர்பாக  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயிர்காக்கும் உயர்ந்த சேவையாற்றும் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைகளைத் தொடர்ந்து புறக்கணித்து, அவர்களைப் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ள திமுக அரசு, குறைந்தபட்சம் கரோனா தொற்றுப் பணியின்போது உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்துக்கு வாழ்வாதார உதவியைக்கூடச் செய்ய மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

கரோனோ பெருந்தொற்றுக் காலம் முதல் தற்போதைய டெங்கு தொற்றுக் காலம் வரை தம் உயிரைப் பொருட்படுத்தாது, மக்கள் உயிர் காக்க முன்கள வீரர்களாக முனைப்புடன் கடமையாற்றி வருபவர்கள் அரசு மருத்துவர்கள். மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் விரைந்து கட்டுக்குள் வர அரசு மருத்துவர்களின் அர்ப்பணிப்புமிக்கக் கடின உழைப்பே முதன்மையான காரணமாகும்.

தமிழகத்தின் 18,000 அரசு மருத்துவர்கள்தான் கோடிக்கணக்கான ஏழை-எளிய தமிழக மக்களின் நல்வாழ்வுக்கு ஆணிவேராக உள்ளனர்.ஆடம்பரத் திட்டங்களுக்காகப் பல்லாயிரம் கோடிகளைச் செலவழிக்கும் திமுக அரசு, 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மருத்துவர்கள் வீதியில் இறங்கிப் போராடியும், அவர்களது அடிப்படை உரிமைகளைக் கூட இன்றுவரை நிறைவேற்றாமல் அலட்சியம் செய்வது கொடுங்கோன்மையாகும்.

அதுமட்டுமன்றி, கரோனோ பெருந்தொற்றுப் பணியின்போது உயிரிழந்த 11 அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியும், அரசுப்பணியும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைச் சிறிதும் மனச்சான்று இன்றி திமுக அரசு ஏற்கமறுப்பது அதைவிடவும் பெருங்கொடுமையாகும்.

கடந்த 22.11.2020 அன்று மருத்துவப்பணியில் இருக்கும்போதே கரோனா தொற்றால் மரணமடைந்த திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர் விவேகானந்தன் மிகுந்த ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவராவார். அவருடைய மனைவி திவ்யாவுக்குக் கருணை அடிப்படையில் அரசுப்பணி கேட்டுப் பலமுறை முறையிட்டும் திமுக அரசு அவரது கோரிக்கைக்கு இன்றுவரை செவிமடுக்கவில்லை.

அரசு மருத்துவர் விவேகானந்தன் மரணத்துக்குப் பிறகு அவரது ஏழைக் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் துயர்துடைப்பு நிதியும், அவரது மனைவிக்கு அரசுப்பணியும் வழங்க வேண்டும் என்று முதலில் அறிக்கை வெளியிட்டது வேறு யாருமல்ல; அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும், இன்றைய முதல்வருமான ஸ்டாலின்தான். தான் முன்வைத்த கோரிக்கையை, தன் கையில் அதிகாரம் கிடைத்த பிறகு நிறைவேற்ற மறுப்பது அப்பட்டமான சந்தர்ப்பவாதமாகும்.

எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது தங்கை திவ்யாவுக்காக முதலைக் கண்ணீர் சிந்திய ஸ்டாலின், முதல்வரான பிறகு கோரிக்கைப் பெட்டியை சாவியோடு தொலைத்துவிடுவதற்குப் பெயர்தான் திராவிட மாடல். தங்கை திவ்யா தன்னுடைய பச்சிளம் குழந்தைகளோடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனைப் பலமுறை சந்தித்து மன்றாடியும் இன்றுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை.

தங்கை திவ்யாவுக்காக அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு அறப்போராட்டங்களை முன்னெடுத்தும் திமுக அரசு அதனைக் கண்டுகொள்ளவில்லை. வேறுவழியின்றி, சட்டப் போராட்டக் குழு தங்கை திவ்யாவுக்கு அரசுப்பணி வழங்கக்கோரி தொடர்ந்த வழக்கில், கடந்த 25.11.2022 அன்று சென்னை உயர்நீதிமன்றம் கருணை அடிப்படையில் வேலை தர வேண்டும் என உத்தரவிட்ட பின்னரும், திமுக அரசு வேலை வழங்கவில்லை. இதுதான் சட்டத்தையும், நீதியையும் திமுக அரசு மதிக்கும் முறையா?

கள்ளச் சாராயம் குடித்துச் செத்தால் 10 லட்சம், உயிரைக் காப்பாற்றும் அரசு மருத்துவர் செத்தால், அவரது குடும்பத்தை நடுத்தெருவில் நிற்க வைப்பதுதான் திமுக அரசு கடைப்பிடிக்கும் சமூக நீதியா? மக்கள் உயிர் காக்க தன் உயிரைப் பணயம் வைத்த அரசு மருத்துவரின் குடும்பத்தை ஒரு கருணை வேலைக்காகக் காத்திருக்கச் செய்து அலைகழிப்பது என்பது, மருத்துவர்களின் ஈகத்தையும், அர்ப்பணிப்பையும் கொச்சைப்படுத்தி இழிவுபடுத்துவதாகும்.

திமுக அரசின் இத்துரோகச் செயல், இனிவரும் இளந்தலைமுறை மருத்துவர்களிடத்தில் சேவைபுரிய வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிடும் கொடுஞ்சூழலை ஏற்படுத்திவிடும்.ஆகவே, கரோனோ பெருந்தொற்று பணியின் போது உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பத்துக்கு அரசுப்பணி வழங்க வேண்டுமென்று தமிழக அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment