Advertisment

விஜயலட்சுமி வழக்கில் போலீஸ் விசாரணைக்கு வந்த சீமான்: வீரலட்சுமி, முக்தார் மீது பாய்ச்சல்

'வீரலட்சுமி, முக்தாருக்கு எனது வாழ்க்கையிலே மன்னிப்பு கிடையாது. அவர்கள் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்' என்று சீமான் தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
NTK SEEMAN

நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், விசாரணைக்காக மனைவியுடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார்.

seeman | naam-tamilar-katchi: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக கடந்த 2011ஆம் ஆண்டு புகார் அளித்திருந்தார் நடிகை விஜயலட்சுமி. இந்த வழக்கில் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த மாதம் 28 ஆம் தேதி மீண்டும் புகார் அளித்தார். இந்த வழக்கில் சீமானுக்கு சம்மன் வழங்கப்பட்ட நிலையில், அவர் ஆஜராகவில்லை. 

Advertisment

இதனையடுத்து, அவருக்கு 2-வது முறையாக சம்மன் வழங்கப்பட்டது. இதற்கிடையில், நடிகை விஜயலட்சுமி இரண்டு நாட்களுக்கு முன்னதாக சென்னை, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகாரை வாபஸ் பெற்றார். தனி ஒருவராக போராட தன்னால் முடியவில்லை என்றும், சீமானை எதிர்கொள்ள தனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். 

நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், விசாரணைக்காக மனைவியுடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார். சீமான் ஆஜராவதை தொடர்ந்து, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. விசாரணைக்கு சீமானுடன் வழக்கறிஞர் ரூபன் சங்கர் உள்ளிட்ட 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

வளசரவாக்கம் காவல் நிலையம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் குவிந்ததால் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிதுநேரம் பதற்றம் நிலவியது. கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டனர். வளசரவாக்கம் காவல்நிலையத்தில் சீமானிடம் போலீசார் சுமார் 1 மணி நேரமாக விசாரணை நடத்தினர். 

இதன்பிறகு சீமான் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அவர் பேசியது பின்வருமாறு:- 

எனக்கு 9ம் தேதி அழைப்பாணை கொடுக்கப்பட்டது. அன்று என்னால் வரமுடியவில்லை. அதனால் 18ம் தேதி வருவதாக தெரிவித்துவிட்டேன். சீமான் அழைப்பாணைக்கு ஒத்துழைக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துவிழக்கூடாது. அதனால் தான் விஜயலட்சுமி தரப்பு கொடுத்த புகாருக்கு விளக்கம் கொடுக்க நானாக வந்தேன். 

2011ல் இந்த வழக்கு கொடுக்கப்பட்டது. வழக்கு தொடக்கப்பட்டதே தி.மு.க காங்கிரஸ் தூண்டுதலின் பெயரால் தான். அன்றைய முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா, வழக்கில் உண்மை இல்லாததால் அதனை தூக்கி எறிந்துவிட்டார். அதன்பிறகு வந்த எடப்படியார் ஆட்சி காலத்திலும் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் ஒன்றும் எடுபடவில்லை. 

128 வழக்குகள் என்மேல் உள்ளது. அவை மக்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்டதற்காக போடப்பட்டது. இந்த வழக்கு மூலம் பெண்களுடன் சம்பந்தப்படுத்தி என்னை அசிங்கப்படுத்தி விடலாம் என்று நினைத்துள்ளனர். மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தி விடலாம், மதிப்பை சிதைத்து விடலாம் என்கிற நோக்கத்தில் போடப்பட்டது. முதலில் திருமணமானது, 60 லட்சம் பணம் கொடுத்தேன், நகை கொடுத்தேன் என்று சொல்லவில்லை, முன்னுக்கு பின் முரணாக கூறியுள்ளார். 

இந்த பெண்களால் நான் 13 ஆண்டுகளாக வன்கொடுமை செய்யப்பட்டுள்ளேன். பெண் வன்கொடுமை பற்றிப் பேசும்போது, ஆண் வன்கொடுமை பற்றி பேச வேண்டும் அல்லவா. திரும்ப பெற்ற வழங்கி ரீ-ஓபன் செய்து, அதற்கு உயிர் கொடுத்து மறுபடி விசாரணை நடத்துகின்றனர். ரகசியமாக விசாரிக்கிறார்கள், மருத்துமனைக்கு கூட்டிக்கொண்டு போகிறார்கள், நீதிமன்றம் செல்கிறார்கள், பாட்ஷா படம் பில்டப் கொடுக்கிறார்கள். 

மானநஷ்ட வழக்கை தொடர்ந்துள்ளோம். அதற்கு அவர்கள் பதில் கூறியே ஆக வேண்டும். அதிலும், வீரலட்சுமி, முக்தாருக்கு எனது வாழ்க்கையிலே மன்னிப்பு கிடையாது. அவர்கள் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் அவர்கள் கொடுத்த புகாருக்கான சான்றை கொடுக்க வேண்டும். தெரியாமல் பேசிவிட்டோம் என்று கூறி பொதுமன்னிப்பு கேட்க வேண்டும். 

இவ்வாறு சீமான் தெரிவித்தார். 

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Seeman Naam Tamilar Katchi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment