நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க கோரி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்
சீமான் தொடர்ந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக சீமான் உள்ளார். தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு 6.72 சதவீத வாக்குகள் கிடைத்தது. இதுவரை எந்த தேர்தலிலும் கட்சி வெற்றி பெறவில்லை என்றாலும் வாக்கு சதவிகிதம் தற்போது கிட்டத்தட்ட 7 சதவீதத்திற்கு உயர்ந்துள்ளது.
நாடாளுமன்ற மக்களைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சி அதற்கும் தயாராகி வருகிறது. ஏற்கனவே
பல்வேறு தொகுதிகளுக்கு சீமான் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அவர்களும் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஜக்யதா கட்சிக்கு தேர்தல் ஆணையம் கரும்பு விவசாயி சின்னத்தை
ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த சீமான் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் கூறுகையில், சீமானின் நாம் தமிழர் கட்சி என்பது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால், கரும்பு விவசாயி சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்கி தர வேண்டும் என அக்கட்சியால் கோர முடியாது என கூறியது.
இதையடுத்து இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தீர்ப்புக்காக வழக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சீமானின் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது உத்தரவிட்டது. இதுகுறித்து டெல்லி உயர் நீதிமன்றம் கூறுகையில், முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் ஏற்கனவே கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் உரிய விதிமுறைகளின் படியே சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளதால் மனுதாரர் கூறும்படி சின்னம் ஒதுக்குவதில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை எனக் கூறி சீமானின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“