திருச்சி எஸ்.பி வருண்குமார் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பியதாக நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து வருண்குமார் தரப்பில், சீமானுக்கு வக்கீல் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நோட்டீஸ்க்கு விளக்கம் அளித்து சீமான் தனது வழக்கறிஞர் மூலம் 16 பக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அதன்பிறகு சீமான் அவதூறாக பேசியதாக கூறி பல வீடியோக்கள் இணையத்தில் வெளியான நிலையில், இந்த வீடியோக்களை திருச்சி எஸ்.பி வருண்குமார் திட்டமிட்டு வெளியிட்டு வருவதாக துரைமுருகன் குற்றம்சாட்டினார்.
அதேபோல் எஸ்.பி வருண்குமார் சாதிய நோக்கத்துடன் செயல்படுவதாக அவரது பெயரை குறிப்பிடாமல் பொதுவெளியில் சீமான் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அதன்பிறகு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பலரும் எஸ்.பி.வருண்குமார் குறித்து வலைதளங்களில் கடுமையாக விமாசனங்களை முன் வைத்து வருகின்றனர். இதன் காரணமாக வருண்குமார் குறித்தும் அவரது குடும்பத்தினர் பற்றியும், நாம் தமிழர் கட்சியினர் அவதூறு பரப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறத்து சீமானுக்கு தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் விட்ட எஸ்.பி.வருண்குமார், தனக்கு எதிராக அவதூறு பரப்பியதற்காக 7 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். ரூ2 கோடி நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது வழக்கறிஞர் மூலம் 16 பக்கத்திற்கு விளக்கம் அளித்து ஒரு அறிக்கை ஒன்றறை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில், "திருச்சி எஸ்பி வருண் குமாரின் சாதி என்னவென்றே எனக்குத் தெரியாது. சாட்டை துரைமுருகனிடம் வருண் குமாரின் ஜாதி இது என்று ஒரு காவல் அதிகாரி கூறியதாக என்னிடம் சொன்னதை நான் பேசிவிட்டேன். எனக்குத் தனிப்பட்ட முறையில் எந்த தகவலும் தெரியாது. இளம் அதிகாரியான வருண் குமாருக்கு மிகவும் பிரகாசமான எதிர்காலம் உள்ளது. அவருக்குப் பதவி உயர்வுகள் மூலம் டிஜிபி ஆகும் அளவுக்குத் தகுதி இருக்கிறது.
அவர் குறித்து சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் அவதூறு கருத்துகள் விவகாரத்திற்கும் எனக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. நான் காவல் துறை மற்றும் காவலர்கள் மீது மிகுந்த மரியாதையும் நம்பிக்கையும் கொண்டவன். போலீசாருக்கு 8 மணி நேரம் வேலை இருக்க வேண்டும் உள்பட போலீசாரின் பல உரிமைகளுக்கு நான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எஸ்.பி.வருண்குமார் மீது அவதூறு பரப்பியதாக சீமான் உட்பட நாம் தமிழர் கட்சியின் 22 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இதற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சீமான் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.