தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 8,981 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 984 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் 4,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.தற்போது மொத்தமாக 30 ஆயிரத்து 817 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புள்ளிவிவரங்களின்படி, சென்னையில் மட்டும் 11 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகின்றனர். அதில், 5 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.
மாநகராட்சி தரவுகளின்படி, ராயபுரம், தேனாம்பேட்டை, அண்ணா நகர், கோடம்பாக்கம் ,அடையாறு ஆகிய ஐந்து முக்கிய மண்டலங்களில் 1,000க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகின்றனர்.
இதில், அதிகப்பட்சமாக தேனாம்பேட்டையில் 1,424 பேரும், கோடம்பாக்கத்தில் 1,362 பேரும், அண்ணாநகரில் 1,286 பேரும், ராயபுரத்தில் 1,075 பேரும் சிகிச்சையில் உள்ளனர். குறைந்தப்பட்சமாக மணாலியில் 115 பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர்.
சென்னையில் திரு வி கா நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் ஆகிய மத்தியப் பகுதிகளில் தான் 50 விழுக்காடு பாதிப்பு பதிவாகியுள்ளது. நேற்றை நிலவரப்படி, இங்கு சுமார் 5 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகின்றனர்.
இதற்கிடையில், மாநகராட்சி சார்பில் வீட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க 1,000 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 200 வார்டுகளுக்கும் தலா 5 தன்னார்வலர்களை நியமித்துள்ளது.. மேலும், கோவிட்-19 தொடர்பான எந்த உதவிக்கும் மக்கள் 044 25384520 மற்றும் 044 46122300 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil