Cyclone Alert Issues by IMD for Odisha and Coastal Andhra Pradesh: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால் சென்னை உள்ளிட்ட 6 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஒடிஸா, ஆந்திர பிரதேசத்திற்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு புயல் எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பொழிகிறது. இதனால் வெப்பம் குறைந்து இதமான வானிலை நிலவுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டின் மின் தேவை குறைந்து மின்வெட்டு தவிர்க்கப்பட்டிருக்கிறது.
வங்கக்கடலில் நேற்று ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதாக நேற்று சென்னை வானிலை மையம் எச்சரித்திருந்தது. இதனையடுத்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இன்று ஏற்றப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு புயல் அபாயம் உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் புயல் சின்னம் ஆந்திரா கடல் பகுதியில் உள்ளதாக மாலையில் வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருக்கிறது. இதனால் ஆந்திரா, ஒடிஸா மாநிலங்களுக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு புயல் எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் வடமாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் குறிப்பாக சென்னையிலும் இன்று பல இடங்களில் மாலை அல்லது இரவில் கனமழை பெய்யும் என்றும் அதேபோல் மணிக்கு 65 முதல் 75 கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
புயல் சின்னம் காரணமாக தெற்கு மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது.