ஆளுனர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்துக்கு முன்னாள் முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ ஆளுநர் மாளிகையின்மீதே வெடிகுண்டு வீசும் அளவுக்கு, தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கை தொடர்ந்து சீர்குலைத்துக் கொண்டிருக்கும் தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனங்கள்.
ஆளுநர் மாளிகை மீதே பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு துணிச்சல் ரவுடிகளுக்கு வந்திருக்கிறதென்றால், இதற்குக் காரணம் வன்முறையாளர்கள்மீது மென்மையானப் போக்கைக் தி.மு.க. அரசு கடைபிடிப்பதுதான் என்று சொன்னால் அது மிகையாகாது.
இனி வருங்காலங்களிலாவது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, ஆளுநர் உள்பட அனைவரின் பாதுகாப்பினையும் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ராஜ்பவன் முன்பு பெட்ரோல் குண்டு வீசி விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்றவரை பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் மடக்கி பிடித்தனர்.
அப்போது அந்த நபர் ரவுடி கருக்கா வினோத் என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து மேலும் 3 குண்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“