scorecardresearch

இ.பி.எஸ்-ஐ இடைக்கால பொதுச் செயலாளர் என இனி அழைக்க வேண்டாம்: மத்திய அரசுக்கு ஓ.பி.எஸ் கடிதம்

எடப்பாடி பழனிசாமி தற்காலிகமாக தேர்வாகியுள்ளதாக கூறுகிறார்கள். இது முறைப்படி கட்சியின் சட்ட விதிகளுக்கு எதிரானது ஆகும்.

G20 Conference Consultative Meeting in delhi
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் டிச.5ஆம் தேதி ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு உள்பட மாநில முதலமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் கூட்டத்தில் கலந்துகொள்ள ஓ.பன்னீர் செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது அவரது தரப்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரலகாத் ஜோஷிக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “அதிமுகவின் தலைமைக்கு நான்தான் சட்டப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். இது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக, அதிமுகவுக்கு நான்தான் ஒருங்கிணைப்பாளராக இருந்து வழி நடத்திக் கொண்டிருக்கிறேன் என்பதையும் இதன்மூலம் உறுதிப்பட தெரிவித்துக்கொள்கிறேன்.

எடப்பாடி பழனிசாமி தற்காலிகமாக தேர்வாகியுள்ளதாக கூறுகிறார்கள். இது முறைப்படி கட்சியின் சட்ட விதிகளுக்கு எதிரானது ஆகும்.
எனவே எதிர்காலத்தில் இத்தகைய தவறு நடக்காமல் மத்திய அரசு நடந்து கொள்ளும் என்று மனப்பூர்வமாக நான் உறுதியாக நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “மத்திய அரசு சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமியை மத்திய அரசு அழைக்க வேண்டாம்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தக் கடிதம் அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய அரசு இதுவரை எந்தப் பதிலையும் அளிக்கவில்லை எனத் தெரியவருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: O panneer selvam letter to central govt