ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின்னர் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது. ஓ.பன்னீர் செல்வத்திடம் இருந்து முதல் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.
அப்போது, சசிகலா அணியில் இருந்த எடப்பாடி பழனிசாமி முதல் அமைச்சராக்கப்பட்டார். தொடர்ந்து, ஓ. பன்னீர் செல்வம் தர்ம யுத்தம் நடத்தினார்.
இதற்கிடையில் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா சிறைக்கு செல்ல, எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் இணைந்தனர்.
டி.டி.வி தினகரன் அ.ம.மு.க. என்ற கட்சியை தொடங்கி நடத்திவந்தார். இந்நிலையில், இரட்டை குழல் துப்பாக்கிகளாக செயல்பட்ட ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி நட்பில் விரிசல் ஏற்பட்டது.
தற்போது அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி கையில் உள்ளது. ஓ. பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார். இந்த நிலையில், இன்று டி.டி.வி. தினகரனை அவர் சந்தித்தார்.
தொடர்ந்து, இருவரும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இணைந்து செயல்பட போவதாக தெரிவித்தனர்.
இந்தச் சந்திப்பை தொடர்ந்து ஓ. பன்னீர் செல்வம் சசிகலாவை சந்திப்பார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. முன்னதாக, செய்தியாளர் சந்திப்பின்போது, ஓ.பி.எஸ் அ.தி.மு.க.வை மீட்கப் போவதாக தெரிவித்துள்ளார்.
இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே முதல்வர் மு.க. ஸ்டாலின் மருமகன் சபரீசனை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்தது போன்ற புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின.
இந்த நிலையில், டிடிவி தினகரனை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு குறித்து விமர்சனங்களும் எழுந்துள்ளன.
டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ். சந்திப்பு அடையாறில் உள்ள டி.டி.வி இல்லத்தில் நடைபெற்றது. அப்போது பண்ருட்டி ராமச்சந்திரனும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“