ஜெயலலிதா மறைவு, சசிகலா சிறை, டிடிவி தினகரன் புதிய கட்சி என அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள் நடந்தன. அப்போது ஓ. பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக ஒன்றாக செயல்பட்டுவந்தனர்.
இந்த நிலையில் இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டது. தொடர்ந்து, கடந்தாண்டு (2022) அதிமுக கட்சியில் இருந்து ஓ. பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஓ.பன்னீர் செல்வம் ஒரு சிறந்த நடிகர். அவரிடம் நடிகர் திலகம் தோற்றுபோய்விடுவார்” என்றார்.
இதற்கு எதிராக ஓ. பன்னீர் செல்வம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் அதிமுகவில் இருந்து என்னை நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் கிடையாது எனக் கூறியிருந்தார்.
மேலும் அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை தொடர்ந்து பயன்படுத்திவந்தார். இதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பு நீதிமன்றத்தில் முறையிட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அதிமுகவின் கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர் செல்வம் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வெள்ளிக்கிழமை (நவ.10) விசாரணைக்கு எடுக்கப்படும் எனக் கூறப்பட்டது.
ஆனால் வழக்கானது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பு நீதிமன்றத்தில் முறையிட்டது.
இந்த நிலையில் வழக்கின் விசாரணை வருகிற புதன்கிழமை (நவ.15) விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“