ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் மனசாட்சியுடன் செயல்பட்டோம் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி குறிப்பிட்டார்.
ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவரது அணியின் 11 எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று (ஏப்ரல் 27) தீர்ப்பு கூறிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வு, ‘சபாநாயகர் அதிகாரத்தில் தலையிட முடியாது’ என கூறியது. இதனால் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களின் பதவி தப்பியது.
ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மீதான இந்த உத்தரவு குறித்து கருத்து தெரிவித்த டிடிவி தினகரன் அணியை சேர்ந்த தங்க தமிழ்செல்வன், ‘இது வாங்கப்பட்ட தீர்ப்பாக தெரிகிறது’ என்றார். அதேபோல, ‘பாண்டிச்சேரியில் சபாநாயகர் உத்தரவில் தலையிட்டு 3 எம்.எல்.ஏ.க்களை பதவியேற்க வைத்து சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு சபாநாயகர் அதிகாரத்தில் மட்டும் தலையிட முடியாதா?’ என விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வில் ஆஜரான வழக்கறிஞர் புருஷோத்தமன், டிடிவி அணியைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் விமர்சனம் குறித்து நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
அப்போது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறுகையில், ‘வழக்கின்தன்மையை பொறுத்துதான் முழுமனதுடன் விசாரித்து சட்டத்துக்குட்பட்டு தீர்ப்பளிக்கிறோம். மனசாட்சிப்படி தீர்ப்பு அளிப்பதால் ஆண்டவனுக்கு மட்டுமே பதில்சொல்ல கடமைப்பட்டுள்ளோம். வழக்கின் தீர்ப்பு குறித்து கருத்து கூற அனைவருக்கும் உரிமை உள்ளது. இதை தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்காக விசாரிக்க விரும்பவில்லை. யாராவது மனு தாக்கல் செய்தால், கோடை விடுமுறைக்கு பிறகு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’ என்றார் இந்திரா பானர்ஜி.