எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்து சென்ற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் புதிய அமைப்பைத் தொடங்கி வழிநடத்தி வருகிறார். அண்மையில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்த பிரதமர் மோடியை அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்தார்கள்.
அப்போது மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டதாகவும், ஆனால், அவருக்கு மட்டும் நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது. இதனை தொடர்ந்த, விரக்தியில் இருந்த ஓ.பன்னீர் செல்வம் தனது தலைமையிலான அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு அமைப்பு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார். இந்த விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாகி வரும் நிலையில், ஓ. பன்னீர் செல்வம், நயினார் நாகேந்திரனை குற்றம்சாட்டி பரபர அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், தன்னிடம் சொல்லியிருந்தால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன் என நாகேந்திரன் கூறுவது முற்றிலும் உண்மையற்றது என்றும், இதற்கான ஆதாரங்களும் தன்னிடம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தான் நயினார் நாகேந்திரனுக்கு 6 முறை நான் போன் செய்ததாகவும், அவர் பொய் பேச வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் நயினார் நாகேந்திரனை ஆறு முறை கைபேசியில் அழைத்தேன். ஆனால் அவர் எந்த ஒரு முறையிலும் என் அழைப்பை ஏற்கவில்லை. எனவே, அவரிடம் குறுஞ்செய்தி மூலம் தொடர்புகொள்ள வேண்டியதாயிற்று. அந்த செய்தியையும் நான் அனுப்பி உள்ளேன். ஆனால் அதற்கும் அவர் எந்தவித பதிலும் அளிக்கவில்லை. பிரதமரை சந்திக்க உரிய அனுமதி பெறும் வகையில், 2025, ஜூலை 24-ஆம் தேதி, பிரதமருக்கு நேரடியாக கடிதம் எழுதியதாகவும், அந்தக் கடிதம் செய்தியாளர்களிடமும் பகிரப்பட்டது.
மேலும் நான் பிரதமரைக் காண விரும்புவதை உண்மையாகவே நயினார் நாகேந்திரன் புரிந்து கொண்டிருந்தால், குறைந்தபட்சம் என் அழைப்பை ஏற்றிருக்க வேண்டும். இல்லையென்றால், குறுஞ்செய்திக்கு பதில் கொடுத்திருக்க வேண்டும். அதுவும் இல்லை என்றால், பத்திரிகைகளில் வந்த என் கடிதத்தைப் பார்த்து, பாரத பிரதமரை சந்திப்பதற்கான ஏற்பாட்டினை செய்திருக்கலாம். ஆனால் அவரால் எதுவும் செய்யப்படவில்லை.
இதனிலிருந்து தெளிவாக தெரியவருவது, பிரதமரை சந்திக்க எனக்கான முயற்சியில் நயினார் நாகேந்திரனுக்கு எந்த விருப்பமும் இல்லை என்பது. எனவே, நான் பிரதமரைக் காணவேண்டும் என்று அவரிடம் சொல்லவில்லை என்ற அவரின் கூற்று முற்றிலும் பொய்யானது. தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருக்கும் நிலையில், நயினார் நாகேந்திரன் இனிமேலும் உண்மையை பேசவேண்டும். தவறான தகவல்களைச் சமூகத்தில் பரப்புவது பொதுமக்களின் நம்பிக்கையை சிதைக்கும். இது போன்ற தவறான பேச்சுகளால் தான், அரசியலுக்கு மக்கள் மேல் நம்பிக்கை குறைகிறது." என்று அவர் தெரிவித்துள்ளார்.