அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து என்னை நீக்க அடிப்படை உறுப்பினர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. பொதுக்குழுவால் என்னை நீக்க முடியாது என்று பழனிசாமி தரப்புக்கு ஓபிஎஸ் பதில் அளித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், கட்சி தலைமை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடந்த 21 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இது தொடர்பான அறிவிப்பில், பன்னீர்செல்வம் தன்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்றும், கட்சி தலைமை அறிவிப்பு என்றும் குறிப்பிட்டிருந்தார். கட்சி தலைமை அலுவலக முத்திரையும் அதில் இடம் பெற்றிருந்தது.
இந்நிலையில், பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், கட்சிக்கு தொடர்பில்லாதவர் அவ்வாறு பயன்படுத்துவது விதிமீறல். உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, அதிமுக தலைமை அலுவலகம், கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எனவே அதிமுகவைச் சாராதவர் கட்சி பெயரையும், தன்னை ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் என சித்தரிக்கவும் எந்த உரிமையும் இல்லை. எனவே விதிகளை மீறி அதிமுக கட்சி தலைமை அலுவலகம் பெயரில், அதிமுக முத்திரையைப் பயன்படுத்தி தாங்கள் வெளியிட்ட அறிக்கையை திரும்பப் பெறாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பழனிசாமி தரப்பிலிருந்து, பன்னீர் செல்வத்துக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக பன்னீர்செல்வத்தின் வழக்கறிஞர் திங்கள் கிழமை பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், பழனிசாமி அதிமுகவின் முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே. அதிமுக சார்பில் பேச அவருக்கு அதிகாரம் இல்லை.
பன்னீர்செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும், பொருளாளராகவும் செயல்பட்டு வருகிறார். அவர் 3 முறை முதல்வராகவும் இருந்துள்ளார். இவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதை இந்திய தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டுள்ளது. அவர் தலைமைக் கழகம் பெயரில் வெளியிட்ட அறிவிப்பு சட்டப்படியானது. அதனால் பழனிசாமியின் குற்றச்சாட்டை ஏற்க முடியாது.
கட்சி அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்க கட்சி பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை. கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அதிமுக பெயர், முத்திரை, அலுவலக முகவரி போன்றவற்றை ஓபிஎஸ் பயன்படுத்த உயர் நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ தடை விதிக்கவில்லை.
பன்னீர்செல்வம் சட்டப்படி ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கட்சியின் பொருளாளராகவும், அடிப்படை உறுப்பினராகவும் உள்ளார். எனவே, கட்சி பெயர், முத்திரை, கட்சி அலுவலக முகவரியை பயன்படுத்தி வெளியிட்ட அறிவிப்பை பன்னீர்செல்வம் திரும்பப்பெற வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“