அதிமுக சார்பில் அறிக்கை… அதிகாரத்தை விட்டுக் கொடுத்த ஈபிஎஸ்?

அதிமுக சார்பில், இதுவரை வந்த எந்த அறிக்கையாக இருந்தாலும் அதை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் இணை ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.எஸ் இருவரும் சேர்ந்து கையெழுத்திட்டே வெளியானது. ஆனால், இப்போது அப்படி வெளியாகவில்லை. தனித் தனியாக அறிக்கை வெளியிடுகின்றனர்.

O Panneerselvam, Edappadi Palaniswami, ops statement releases separately in AIADMK party, அதிமுக, ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி கே பழனிசாமி, ஓபிஎஸ், ஈபிஎஸ், aiadmk, eps, ops eps, aiadmk statement

அதிமுகவில் இதுவரை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்தே அறிக்கைகள் வெளியிட்டு வந்த நிலையில், சில நாட்களாக இருவரும் தனித் தனியாக அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்கள். அதிமுகவில் ராம லக்‌ஷமணர்களாக அழைக்கப்பட்டு இரட்டை தலைமைகளாக செயல்பட்ட இருவரும் தேர்தலில் தோல்விக்கு பின்பு, அவர்களின் அணுகுமுறை மாறியுள்ளதாக தெரிகிறது.

அதிமுக ஆட்சியில் இருந்தபோது, அப்போது முதல்வராக இருந்த ஈபி.எஸ்-ஸும் துணை முதல்வராக இருந்த ஓ.பி.எஸ்-ஸும் கட்சியில் சார்பில் எந்த அறிக்கையாக இருந்தாலும் இருவரும் கையெழுத்திட்டு சேர்ந்தே அறிக்கைகளை வெளியிடுவார்கள். எல்லா அறிக்கைகளும் அப்படியேதான் வெளியாகியது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, இந்த 4 ஆண்டுகளில் ஈ.பி.எஸ் கட்சியிலும் ஆட்சியிலும் ஓ.பி.எஸ்-ஐத் தாண்டி ஸ்கோர் செய்து நிரூபித்திருக்கிறார். அவற்றை முன்னிறுத்திதான், ஈ.பி.எஸ் தன்னை முதல்வர் வேட்பாளராக ஓ.பி.எஸ் வாயாலேயே அறிவிக்க செய்தார். ஓ.பி.எஸ்-ஸும் நிலைமையை புரிந்துகொண்டு செயல்பட்டார். ஆனால், தேர்தலுக்கு பின்னர், அதிமுக தோல்வியடைந்ததையடுத்து, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு கட்சிக்குள் வெளிப்படையாகவே விவாதித்துக்கொண்டனர். அதிமுக ஆட்சியில் இருந்தபோது, அதிமுகவினர் ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் இருவரையும் ராம லக்‌ஷ்மனர்களாக அழைத்தாலும் அவர்கள் எப்போதும் அப்படி இல்லை என்பதே அவர்களுக்கு இடையே புகைந்து கொண்டிருக்கும் அரசியல் போட்டி வெளிப்படுத்தியது. அதே நேரத்தில், இருவருக்கும் இடையேயான போட்டி பொதுவெளியில் தெரியும்படியாக இருவருமே எந்த அறிக்கைகளையும் வெளியிட்டதில்லை. அதே போல, பொது நிகழ்ச்சிகளிலும் அல்லது ஊடகங்களிலோ பேசியதில்லை.

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியைப் பிடித்த ஈ.பி.எஸ் தற்போது கூட்டு தலைமையில் இயக்கும் அதிமுகவை ஒற்றைத் தலைமையாக மாறும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் ஓ.பி.எஸ்-ஸும் தன் பங்குக்கு காய் நகர்த்தி வருவதாகவும் பேசப்பட்டு வருகிறது.

ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் இடையே கட்சிக்குள் போட்டிகள் இருந்தாலும் தேர்தலுக்கு முன்புவரை அதிமுகவின் அறிக்கைகளை கட்சி சார்பில் இருவருமே சேர்ந்தே வெளியிட்டு வந்தனர். ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் இணைந்தது முதல் அப்படித்தான் நடந்து வருகிறது. ஆனால், அண்மையில், சில நாட்களாக ஓ.பி.எஸ் அதிமுக தலைமை அலுவலகத்தின் முகவரி அச்சிடப்பட்ட அதிமுகவின் லெட்டர் பேடில் அவர் மட்டுமே கையெழுத்திட்டு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். இது அதிமுகவில் மட்டுமல்ல வெளியேயும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி அரசை விமர்சித்து அல்லது கோரிக்கைகளை வலியுறுத்தி வெளியிடும் அறிக்கைகளில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் தலைமைச் செயலகத்தின் முகவரியில் வெளியிட்டு வருகிறார்.

அதே போல, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தலைமை அலுவலக லெட்டர்பேடில், “தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்” என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து ஒரு அறிக்கை வெளியிடார்.

“வாகன ஓட்டுநர்களின் நியாயமான கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து, சட்டத்திற்குட்பட்டு தமிழ்நாட்டில் இ-பதிவு முறையில் அனுமதியோடு இயக்கப்பட்ட அனைத்து வாகனங்களையும் அதன் உரிமைதாரர்களிடம் திரும்ப ஒப்படைக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமென முதல்வர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.” என்று ஓ.பி.எஸ் மட்டும் கையெழுத்திட்டு ஒரு அறிக்கை வெளியிட்டார். இப்படி, ஓ.பி.எஸ் தனியாக தான் மட்டும் கையெழுத்திட்டு கட்சியின் முகவரியில் இருந்து கிட்டத்தட்ட 6 அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.

அதே நேரத்தில், மே 23ம் தேதி அதிமுக கட்சி சார்பில் வெளியிட்ட அறிக்கையில் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் இருவருமே கையெழுத்திட்டிருந்தனர். “கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறாகவும், இயக்கத்தின் லட்சியங்களுக்கு விரோதமாகவும் செயல்படுபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது தயவு தாட்சன்யமின்றி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.” என்ற அறிக்கையில் இருவருமே கையெழுத்திட்டிருந்தனர்.

ஓ.பி.எஸ் இப்படி கட்சி முகவரி கொண்ட லெட்டர்பேடில், தனித்து அறிக்கைவிடுவதால் இருவருக்கும் இடையேயான போட்டி இப்போது பொதுவில் வெளிப்படையாகவே நடக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஆனாலும், ஈ.பி.எஸ் கட்சி சார்பில் கட்சி முகவரி கொண்ட லெட்டர் பேடில் ஓ.பி.எஸ் அறிக்கை வெளியிடுவதற்கு விட்டுக்கொடுத்தாரா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

எப்படியிருந்தலும், அதிமுக லெட்டர்பேடில், இதுவரை வந்த எந்த அறிக்கையாக இருந்தாலும் அதை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி இருவரும் சேர்ந்து கையெழுத்திட்டே வெளியானது. ஆனால், இப்போது அப்படி வெளியாகவில்லை. தனித் தனியாக அறிக்கை வெளியிடுகின்றனர். கட்சி முடிவுகளில் சேர்ந்தும் வெளியிட்டு வருகின்றனர் என்பதே தமிழக அரசியல் களத்தில் விவாதமாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: O panneerselvam and edappadi k palaniswami statement releases separately behalf aiadmk party

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express