தேர்தலுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில், தனிநீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதிமுகவில் சென்ற ஆண்டு முதல் இரட்டை தலைமை சிக்கல் தொடர்ந்து வருகிறது. சென்ற ஆண்டு ஜூலை 11-ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என்றும் அதில் ஓ.பி,எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கியத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கும் சேர்த்துக்கொள்ளபட்டது. உச்சநீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித் தனியாக வழக்கு தொடர்ந்தனர்
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி குமரேஷ் பாபு, ஓ.பி.எஸ் மனுக்களை தள்ளுபடி செய்தார். பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்புக்கு உடனடியாக ஓ.பி.எஸ் தரப்பு 2 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மேல்முறையீடு செய்தது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பினரும் இறுதி விசாரணைக்கு தயார் என்று பதிலளித்தனர். இரு தரப்புகளின் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஏப்ரல் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil