ஓ.பன்னீர்செல்வம் சொத்துக் குவிப்பு புகார் குறித்து உரிய விசாரணை தொடங்கியிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூறியது.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக, திமுக அமைப்புச் செயலாளரும் ராஜ்ய சபா எம்.பி.யுமான ஆர். எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
‘துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தனது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதா பானு மற்றும் சகோதரர்கள் பெயரில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். வருமானம் குறித்து தவறான தகவல்களை தேர்தல் வேட்பு மனுக்களில் கொடுத்துள்ளார்.
தேனி மாவட்டம் போஜராஜன் மில்ஸ் நிறுவனத்துக்கு 99 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட 140 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை சந்தை விலைக்கும் குறைவாக கொடுத்து வாங்கியுள்ளார். ஸ்ரீவில்லிப்புத்தூரில் செண்பகத்தோப்பு பகுதியில் மாந்தோப்பு வாங்கியுள்ளார். அமெரிக்கா, துருக்கி, இந்தோனேசியா நாடுகளில் உள்ள நிறுவனங்களிலும், இந்திய நிறுவனங்களிலும் பன்னீர்செல்வத்தின் வாரிசுகள் முதலீடு செய்துள்ளனர்.
2011 தேர்தலில் மனைவிக்கு 24.20 லட்ச ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்ட பன்னீர்செல்வம், 2016 ஆம் ஆண்டு 78 லட்ச ரூபாய்க்கு சொத்துள்ளதாக தெரிவித்துள்ளது சந்தேகத்தை எழுப்புகிறது. இவரது மகன் ஜெயபிரதீப் மூன்று நிறுவனங்களில் இயக்குனராக உள்ளார்.
பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சொத்துக்களை வாங்கியுள்ளார். அரசு ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி டைரியில் பன்னீர் செல்வத்துக்கு தொடர்பிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 6 மாதங்களில் அவரிடம் 4 கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளதாக டைரியில் குறுப்பிட்டுள்ளார். உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த பிறகு சிபிஐ, சேகர் ரெட்டியின் வீட்டில் சிபிஐ நடத்திய சோதனையில் இந்த டைரி கைப்பற்றபட்டது.
இதன்மூலம் தனக்கு வாக்களித்த மக்களுக்கு அவர் துரோகம் இழைத்துள்ளார்.
இதுதொடர்பாக மார்ச் 10ம் தேதி லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் கொடுத்தும், நடவடிக்கையில்லை. பொது ஊழியருக்கு எதிராக புகார் அளித்தால் உடனடியாக விசாரணை நடத்த வேண்டிய கடமை உள்ளதால், ஒ.பன்னீர்செல்வம் குடும்பத்தினர் மீதான சொத்து குவிப்பு தொடர்பாக கொடுத்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும்’. இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
இதே போல் அறப்போர் இயக்கம் சார்பில் ஜெயராம் வெங்கடேசன் என்பவரும் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரின் குடும்பத்திற்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘அரசு தலைமை வழக்கறிஞரை பார்த்து புகார் அளித்து நான்கு மாதங்கள் ஆகியுள்ளது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கபட்டது?’ என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயன், ‘ஆர்.எஸ்.பாரதி அளித்த புகார் மனு மீது ஆரம்ப கட்ட விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக 18 ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் விசாரணையை முடிவில் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்’ என தெரிவித்தார்.
அப்போது திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இது போன்ற வழக்குகளில் உச்சநீதிமன்றம் லலிதா குமாரி வழக்கில் அளித்த தீர்ப்பில் அடிப்படையில் விசாரணையை மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.
இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதி, ‘மனுதாரர் புகார் மனு மீது உரிய முறையில் விரைந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். லலிதா குமாரி வழக்கில் வகுத்த விதிகளின் படி விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
மனுதாரர்கள் தங்களிடம் கூடுதல் ஆவணங்கள் இருந்தால் அதனை விசாரணை அதிகாரி முன்பு அளிக்கலாம். விசாரணையில் தொய்வு இருப்பதாக மனுதாரர்கள் கருதினால் நீதிமன்றத்தை நாடலாம்’ என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.