மு.கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்றார். மூத்த அமைச்சர்களுடன் சென்று மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியை நலம் விசாரித்தார் அவர்!
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. அவரது சிறுநீரக பாதையில் நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகவும் சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை அறிக்கை கூறியது.
கருணாநிதியின் உடல்நிலை குறித்த இந்த அறிக்கை ஜூலை 26 இரவு 7 மணிக்கு வெளியானது. கருணாநிதியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு தொண்டர்கள் யாரும் நேரில் வரவேண்டாம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இந்த நிலையில் வியாழன் இரவு 9.45 மணியளவில் தமிழ்நாடு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் வந்தார். அவருடன் சீனியர் அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி, வேலுமணி ஆகியோரும் வந்தனர்.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வந்தபோது அங்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அங்கு இருந்தனர். ஓ.பன்னீர்செல்வத்தை ஸ்டாலின் வரவேற்று அழைத்துச் சென்றார். ஸ்டாலினிடம் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் கோபாலபுரம் இல்லத்திற்குள் அமர்ந்து கருணாநிதியின் நலம் விசாரித்தனர்.
சுமார் கால் மணி நேரம் அங்கு இருந்துவிட்டு ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் அங்கிருந்து கிளம்பினர். கோபாலபுரம் இல்லத்திற்கு வெளியே நிருபர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், ‘அரசியல் நாகரீக அடிப்படையில் உடல் நலம் விசாரிக்க வந்தோம். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவர்களும் வந்தனர். அதேபோல நாங்களும் வந்தோம். தலைவர் உடல் நிலை குறித்து அனைவரிடமும் கேட்டோம். நன்றாக இருக்கிறார். விரைவில் குணம் அடைவார்’ என்றார் ஜெயகுமார். ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், ‘கலைஞர் நன்றாக இருக்கிறார்’ என்றார்.
தமிழ்நாட்டில் இரு பெரும் திராவிடக் கட்சிகளும் எதிரிக் கட்சிகளாக செயல்படுவதாக விமர்சனங்கள் உண்டு. அந்த நிலைமை மாறி, ஏற்கனவே ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது ஸ்டாலின் சென்று சசிகலாவை சந்தித்து நலம் விசாரித்தார். பிறகு காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டபோது அப்போதைய அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அறிவுறுத்தலின்படி தம்பிதுரை சென்று நலம் விசாரித்தார்.
தொடர்ந்து தற்போது முதல் முறையாக கோபாலபுரம் இல்லத்திற்கு அதிமுக தலைவர்கள் வந்திருந்து கருணாநிதியின் உடல் நலம் விசாரித்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். காலம் தொட்டு நடக்காத அரிய அரசியல் மாண்பு இது!