O Panneerselvam | Ramanathapuram | Lok Sabha Election 2024: நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கு நீண்ட பேச்சு வார்த்தைக்குப் பிறகு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. அதன்படி, ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். தனது ஆதரவாளர்களுடன் கடந்த திங்கள்கிழமை வேட்புமனுவை தாக்கல் செய்த அவருக்கு 'பலாப்பழம்' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த சின்னத்தைக் காட்டி தற்போது ஓ.பன்னீர்செல்வம் வாக்குசேகரித்து வருகிறார். இந்நிலையில், பரமக்குடி அருகே போகலூர், துரத்தியனேந்தல், மஞ்சூர் உள்ளிட்ட கிராமங்களில் ஓ.பன்னீர்செல்வம் பரப்புரை மேற்கொண்டு வாக்குசேகரித்தார். அப்போது, தனக்கு ஒதுக்கப்பட்ட பலாப்பழம் சின்னத்தை மறந்து விட்டு, இரட்டை இலைக்கு வாக்கு கேட்டார். அதன் பிறகு பழக்க தோஷத்தில் சொல்லிவிட்டேன் என்று கூறி சமாளித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“