ஓ.பன்னீர்செல்வம் தனது தேனி பேச்சு கிளப்பிய சர்ச்சைக்கு இன்று விளக்கம் அளித்தார். அதிமுக அணிகளை இணையச் சொன்னது பிரதமரின் பெருந்தன்மை என்றார் அவர்.
ஓ.பன்னீர்செல்வம், இரு நாட்களுக்கு முன்பு தேனி மாவட்ட அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசுகையில், ‘பிரதமர் கூறியதால் அணிகள் இணைப்புக்கு ஒப்புக்கொண்டதாக’ கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுக உள் அரசியலில் பிரதமர் மோடி தலையிட்டது இதன் மூலமாக உறுதி ஆகி இருப்பதாக பல்வேறு கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்தனர்.
ஓ.பன்னீர்செல்வம் இப்போதும் பாஜக.வின் ஏஜெண்டாக செயல்படுவதாக டிடிவி தினகரன் கூறினார். பிரதமர் மோடி, அதிமுக விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்வதாக ஓராண்டுக்கு முன்பே நான் கூறியது உறுதி ஆகி இருப்பதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் விமர்சித்தார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் பேச்சு தமிழக பாஜக தலைவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘நாங்கள் கட்சி பிரச்னையை குறிப்பிட்டால்கூட, அதை அமித்ஷாவிடம் பேசச் சொல்வதுதான் பிரதமரின் இயல்பு. எனவே ஓபிஎஸ் கூறுவது நம்பும்படியாக இல்லை’ என்றார்.
ஓ.பன்னீர்செல்வம் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து தனது தேனி பேச்சுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர், ‘நாங்கள் தர்மயுத்தம் தொடங்கி தனி அணியாக இருந்தபோது, அவர்களுக்குள்ளே பிரச்னை ஏற்பட்டது. தினகரன் சர்வாதிகார போக்குடன் செயல்பட்டு, பிறகு தினகரன் இல்லாத நிலையில் அதிமுக என்கிற மாபெரும் இயக்கம் ஒன்றுபட வேண்டும், இரட்டை இலை கிடைத்திட வேண்டும், அதிமுக என்கிற மாபெரும் இயக்கம் நிலைக்க வேண்டும் என்கிற கருத்தில் நாங்கள் இணைந்தோம்.
இணைப்புக்கு முன்பு தமிழக பிரச்னைகளுக்காக டெல்லி செல்ல வேண்டியிருந்தது. டெல்லி சென்றிருந்தபோது நான் பிரதமரை சந்தித்தபோது, ஒரு நல்ல கருத்தாக சொன்னார். அதைத்தான் தேனி கூட்டத்தில் பேசினேன். ‘18 எம்.எல்.ஏ.க்களை வைத்திருக்கும் தினகரனால் ஆட்சி கவிழும் வாய்ப்பு இருக்கிறதா?’ எனக் கேட்டார். ‘ஆம்’ என்றேன். அப்போது நான், இணைவது குறித்து கேட்டேன். அதற்கு அவர், ‘இணைவதுதான் நல்லது’ என்றார்.
இந்தக் காலத்தில் தங்கள் கட்சியை எப்படி வளர்க்கலாம் என்றுதான் பலரும் பார்ப்பார்கள். ஆனால் அம்மா அவர்கள் மீது கொண்ட பாசத்தால் நல்ல எண்ணத்தில் பிரதமர் கூறினார். அது அவரது பெருந்தன்மையை அது காட்டுகிறது. எதிர்க்கட்சிகள் இதை அரசியலுக்காக விமர்சிக்கிறார்கள்’ என்றார் ஓபிஎஸ்.
ஓபிஎஸ்.ஸின் தேனி பேச்சு பிரதமருக்கு தர்ம சங்கடத்தை உருவாக்கியதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து ஓபிஎஸ் இந்த விளக்கத்தை தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது!