/indian-express-tamil/media/media_files/2025/08/14/ops-eps-images-2025-08-14-20-16-36.jpg)
“செயலின் வலிமை, தன் வலிமை, பகைவனின் வலிமை, துணை செய்பவர்களின் வலிமை இவற்றை ஆராய்ந்து செயலைச் செய்ய வேண்டும்” என்றார் திருவள்ளுவர். இதற்கு மாறான எந்தச் செயலும் படுதோல்வியில் தான் முடியும்.” என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ‘தலைமைப் பண்பு இல்லாத எடப்பாடி பழனிசாமிக்கு தோல்வி நிச்சயம்’ என்று உதாரணத்துடன் கூறி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அ.தி.மு.க என்பது ஒரு மாபெரும் மக்கள் இயக்கம். இப்படிப்பட்ட மக்கள் இயக்கம் முப்பது ஆண்டு காலம் தமிழ்நாட்டை ஆட்சி செய்தது என்றால் அதற்குக் காரணம் தலைமைப் பண்பு மிக்க, ஆளுமை மிக்க எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர்தான். சாதாரணத் தொண்டன் வணக்கம் தெரிவித்தாலும், பதிலுக்கு வணக்கம் தெரிவிக்கும் பண்பை கொண்டவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா. தொண்டர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கக் கூடியத் தலைவர்களாக விளங்கியவர்கள். இந்தத் தலைமைப் பண்புதான் தொடர் வெற்றிக்கு வழிவகுத்தது.
அறிவு, அனுபவம், மேலாண்மைத் திறன், மற்றும் மனிதர்களை மதித்து நடந்துகொள்ளும் பண்பு ஆகிய நான்கும் சேர்ந்ததுதான் தலைமைப் பண்பு. ஒரு சிறந்த தலைவர் என்பவர் அனைவரையும் துணைவர்கள் கொண்டு, அவர்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பளித்து, இயக்கத்தை திறம்பட மேலாண்மை செய்வார். இதற்கு மாறாக, செயல்படுபவர் பிறர் பார்வையில் ஏளனத்திற்குரியவராக இருப்பார். ஆணவம், கடுங் கோபம், இழிவான நடத்தை போன்ற குணாதிசயங்களைக் கொண்டவர்கள் தலைமைப் பதவிக்கு அருகதையற்றவர்கள். தலைமைப் பண்பிற்கான அறிகுறி துளியும் இல்லாத முன்னாள் முதலையமைசர் எடப்பாடி கே. பழனிசாமியிடத்தில் மாபெரும் மக்கள் இயக்கமாம் அ.தி.மு.க தற்போது சிக்குண்டு கிடப்பதால், தொடர் தோல்வியைச் சந்தித்து வருகிறது.
உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் கே. ராஜூ மதுரையில் எடப்பாடி கே. பழனிசாமியை வரவேற்றுவிட்டு அவரது காரில் ஏறும்போது, அவர் வேறு காரில் வருமாறு அறிவுறுத்தப்பட்டார். இந்தக் காட்சி அனைத்து ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவியது. இது செல்லூர் ராஜூக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய அவமரியாதை.
இதேபோன்று, எம்.ஜி.ஆர். காலத்தில் மக்களவைத் துணைத் தலைவராக பதவி வகித்தவரும், ஜெயலலிதா காலத்தில் மத்திய சட்ட அமைச்சராக பதவி வகித்தவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் மு. தம்பித்துரை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது தன்னுடைய கருத்தை தெரிவிக்க முற்பட்டபோது அதைத் தெரிவிக்க அனுமதிக்கப்படவில்லை. இந்தக் காட்சியும் அனைத்து ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவியது. இது மு. தம்பித்துரைக்கு ஏற்பட்ட மிகப் பெரிய இழுக்கு. இதுபோல் வெளிவந்த சம்பவங்கள் ஏராளம். அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டுமென்று விரும்புபவர்கள் குறி வைத்து அவமரியாதை செய்யப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
“செயலின் வலிமை, தன் வலிமை, பகைவனின் வலிமை, துணை செய்பவர்களின் வலிமை இவற்றை ஆராய்ந்து செயலைச் செய்ய வேண்டும்” என்றார் திருவள்ளுவர். இதற்கு மாறான எந்தச் செயலும் படுதோல்வியில் தான் முடியும்.” என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.