முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, யூனியன் கவர்ன்மெண்ட் என்பதை ஒன்றிய அரசு என்று குப்பிட்டு வரும் நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாடு இந்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறி சிறுமைப்படுத்துவது மக்கள் நலன் பயக்கும் செயல் அல்ல, இதுபோன்ற செயல் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்று விமர்சித்துள்ளார். ஓ.பி.எஸ்.ஸின் கருத்துக்கு திமுக ஆதரவாளர்கள், அதிமுகவினர், பாஜக ஆதரவாளர்கள், நெட்டிசன்கள் என பலரும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று கூறிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த தமிழ்நாட்டில் தேசியத்திற்கு எதிரான செயல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதை பார்க்கும்போது, தமிழ்நாடு ‘திசைமாறி’ செல்கிறதோ என்ற எண்ணம் பொதுமக்களிடையே மேலோங்கி நிற்கிறது.
19-07-2019 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பேசிய அப்போதைய எதிர்கட்சித் தலைவர், தற்போதைய முதல்-அமைச்சர், ‘வரக்கூடிய காலக்கட்டத்திலே திமுக ஆட்சிக்கு வரப்போகிறது.
அப்படி வருகிற அந்த நேரத்திலே தேர்தலிலே நாங்கள் என்னென்ன உறுதிமொழிகளை, வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறோமோ அவற்றை நிச்சயமாக செய்வோம். சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வோம்’ என்று கூறினார்.
ஒருவேளை அந்தச் சொல்லாததில் ‘ஒன்றிய அரசு’ என்ற வார்த்தையும் ‘ஜெய் ஹிந்த்’ என்ற சொல் கவர்னர் உரையில் இடம்பெறாததால் தமிழகம் தலை நிமிர்ந்துவிட்டது’ என்ற வாசகமும் அடங்கியுள்ளது போலும்.
தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்ததிலிருந்து மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று குறிப்பிட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. இதற்கான காரணத்தை முதல்-அமைச்சர் 23-06-2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையிலே அளித்து இருப்பது விசித்திரமாக இருக்கிறது.
அதிலே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வரி, ‘இந்தியா, அதாவது பாரதம் மாநிலங்களைக் கொண்ட ஓர் ஒன்றியமாக இருக்கும்’ என்று குறிப்பிட்டிருப்பதாக சுட்டிக்காட்டி, அதைத்தான் பயன்படுத்துகிறோமே தவிர, சட்டத்தில் இல்லாததை நாங்கள் பயன்படுத்தவில்லை என்றும், ஒன்றியம் என்பது தவறான சொல் அல்ல என்றும், ‘மாநிலங்கள் ஒன்று சேர்ந்தது’ என்பது தான் அதன் பொருள் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால், அது பொருள் அல்ல, சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரால் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டம் பகுதி ஐந்தின்படி, யூனியன் என்றால் பல்வேறு அமைப்புகளை உள்ளடக்கிய இந்திய நாட்டைக் குறிக்கும் சொல்லே தவிர இந்திய அரசை குறிக்கும் சொல் அல்ல.
முதல்-அமைச்சர் தனது பேச்சில் பேரறிஞர் அண்ணா 1963-ம் ஆண்டு மாநிலங்களவையில் பேசியதையும், மரியாதைக்குரிய ம.பொ.சி., மூதறிஞர் ராஜாஜி, குறிப்பிட்ட சில வார்த்தைகளை சுட்டிக்காட்டி அவற்றில் கூட்டாட்சி தத்துவம் அடங்கியிருக்கிறது என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
கூட்டாட்சித் தத்துவம் குறித்து தலைவர்கள் கூறிய வார்த்தைகளை வைத்து இந்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிடுகிறோம் என்பதில் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை.
இந்த ஒப்பீடு பொருத்தமானதாக இல்லை. ஏனென்றால், எந்தத் தலைவரும் இந்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று கூறவில்லை. இன்னும் சொல்லப்போனால், ‘மாநிலங்கள் பிரித்து தரப்பட்டுள்ளது’ என்று தான் பேரறிஞர் அண்ணா 1963-ம் ஆண்டு மாநிலங்களவையில் பேசி இருக்கிறார். அதாவது, மாநிலங்களை பிரித்துக் கொடுப்பதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் தான் இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.
எனவே, மாநிலங்கள் ஒன்று சேர்ந்தது’ என்பது தான் யூனியன் என்ற வார்த்தைக்கு பொருள் என்ற வாதம் சரியானதல்ல. மொத்தத்தில், ‘மாநிலங்களை உள்ளடக்கிய யூனியன்’ என்பது தான்.
இந்திய நாடு பிரிக்கப்பட முடியாத ஒன்றிணைக்கப்பட்ட ஒரு தேசம் என்பதை தான் வாசகம் நமக்கு உணர்த்துகிறது என்பதையும் இந்த தருணத்தில் நான் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்.
அதே சமயத்தில் இந்திய அரசை பற்றி குறிப்பிடும் போது, இந்திய அரசு என்றே இந்திய அரசமைப்பு சட்டத்தில் சொலலப்பட்டிருக்கிறது.
எனவே இந்திய நாட்டை ஆளும் ஓர் அரசைக் குறிப்பிடும் போது எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், இந்திய அரசு என்று குறிப்பிடுவது தான் பொருத்தமான ஒன்றாகும்.
ஆனால் தற்போதைய தி.மு.க. அரசோ ‘ஒன்றிய அரசு’ என்று குறிப்பிடுகிறது. தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் இயற்றப்பட்ட பல அரசினர் தீர்மானங்களில் இந்திய பேரரசு என்று மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி குறிப்பிட்டு இருப்பதை இந்த தருணத்தில் நான் நினைவூட்ட விரும்புகிறேன்.
இந்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று சொல்வது நமது இந்திய தாய்த் திருநாட்டை கொச்சைப்படுத்துவது போலும், சிறுமைப்படுத்துவது போலும் அமைந்துள்ளது என்று தமிழ்நாட்டு மக்கள் நினைக்கிறார்கள் என்பதை தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
மத்திய அரசுடன் இணக்கமான போக்கினைக் கடைப்பிடித்து, தமிழ்நாட்டின் உரிமைகளை, கோரிக்கைகளை ஜீவாதாரப் பிரச்சினைகளை, நலன்களை வென்றெடுக்க நடவடிக்கை எடுக்காமல், இந்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று கூறி சிறுமைப்படுத்துவது மக்கள் நலன் பயக்கும் செயல் அல்ல என்பதையும், இதுபோன்ற செயல் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்தபடியாக ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. பேசுகையில், ‘ஆளுநர் உரை என்பது இந்த அரசு எந்த திசையிலே பயணிக்கப் போகிறது என்பதை காட்டுகின்ற உரை’ என்று சொல்லிவிட்டு ஜெய் ஹிந்த் என்ற வார்த்தையை ஆளுநர் உரையில் இருந்து நீக்கியதால் தமிழகம் தலை நிமிர்ந்தது என்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் கூறி இருக்கிறார். ‘ஜெய் ஹிந்த் என்ற வார்த்தை ஆளுநர் உரையில் தவறுதலாககூட விடப்பட்டிருக்கலாம். நான் அதை பெரிதுபடுத்த விரும்பவில்லை.
ஆனால் ஜெய் ஹிந்த் என்ற வார்த்தையை ஆளுநர் உரையில் இருந்து நீக்கியதால் தமிழகம் தலை நிமிர்ந்தது என்று கூறியது நியாயமா? இந்திய இறையாண்மைக்கு உகந்ததா? என்பதுதான் தமிழக மக்களின் கேள்வியாக இருக்கிறது.
இந்தியச் சுதந்திர போராட்டக் காலத்தில் அடிமைப்பட்ட இந்திய மக்களின் மனங்களில் நாட்டுப்பற்றை விதைக்கவும், விடுதலை வேட்கையை வளர்க்கவும், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களால் ஜெய் ஹிந்த், வந்தே மாதரம் என்ற வார்த்தைகள் அனைத்து பொது மேடைகளிலும் முழங்கப்பட்டன.
இந்த சொல்லை முதன் முதலில் முழங்கியவர் விடுதலைப் போராட்ட வீரர் செண்பகராமன் பிள்ளை ஆவார். ஜெய்ஹிந்த் என்பது நாட்டிற்காக வாழ்க்கையை தியாகம் செய்த வ.உ.சிதம்பரம் பிள்ளை, திருப்பூர் குமரன் ஆகியோரின் வீர முழக்கம்.
தீரன் சின்னமலையின் தீரச் சொல். நேதாஜி சுபாஷ் சந்திரபோசால் அடிக்கடி முழங்கப்பட்ட ஜெய் ஹிந்த் என்ற சொல் வெற்றிக்கான வீர முழக்கச் சொல்.
ஜெய் ஹிந்த் என்பது இந்திய விடுதலைக்காக போராடிய இலட்சக்கணக்கான விடுதலைப் போராட்ட வீரர்களின் கடைசி வீர முழக்கம்.
இந்தியத் திருநாட்டை, இந்தியத் தாய் நாட்டை வணங்கும் ஒப்பற்றச் சொல். ஜெய் ஹிந்த் என்பது இந்திய விடுதலைக்காக போராடிய லட்சக்கணக்கான விடுலைப் போராட்ட வீரர்களின் கடைசி வீர முழக்கம்.
இந்தியத் திருநாட்டை, இந்தியத் தாய் நாட்டை வணங்கும் ஒப்பற்றச் சொல். ஜெய் ஹிந்த் என்ற வார்த்தை சிறு குழந்தை முதல் வயது முதிர்ந்த பெரியோர் வரை நாட்டுப்பற்றை தட்டியெழுப்பும் மந்திரச் சொல். இதன் பொருள் வெல்க இந்தியா என்பதாகும்.
இந்திய நாடு விடுதலைப் பெற்ற நாளில் அனைத்து அஞ்சல்களிலும் ஜெய் ஹிந்த் என்ற வெற்றி முழக்கச் சொல் முத்திரையாகப் பதிக்கப்பட்டது.
இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த இந்த வெற்றிச் சொல், அண்மையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரையில் இடம் பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, இதனால் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது என்று சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசியது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
சாதி, மத, இன, மொழி பாகுபாடின்றி இந்தச் சொல் இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது உணர்வுப்பூர்வமாக மக்களால் பயன்படுத்தப் பட்ட வெற்றிச் சொல். மக்களின் உணர்ச்சிகளை தட்டியெழுப்பிய சொல்.
இந்தச் சொல்லை இழிவுபடுத்தும் வகையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக ஈஸ்வரன் எம்.எல்.ஏ. பேசிய வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்வதோடு, தேர்தல் வாக்குறுதிகளான பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு, நகை கடன் ரத்து, கல்வி கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட மக்களின் நலன் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தமிழ்நாடு அரசு, இந்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்துக்கு விசிக எம்.எல்.ஏ. ஆளூர் ஷா நவாஸ் கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளார்.
ஆளுர் ஷா நவாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “UnionGovt என்று சட்டம் சொல்கிறது. Union Minister என்று அமித்ஷா பெயர் பலகையிலும் உள்ளது. அதையே தமிழில் ஒன்றியஅரசு ஒன்றியஅமைச்சர் என்கிறோம். இதற்கு ஏன் OPS கதறுகிறார்? பாஜக சொல்கேட்டு அதிமுகவை பிளந்தவர், பிறரை பிரிவினைவாதி என்கிறார். மகனை ஒன்றிய அமைச்சராக்க எதுவும் பேசுவார்!” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஒன்றிய அரசு என்று குறிப்பிடுவது குறித்து ஓ.பி.எஸ் தெரிவித்த கருத்து குறித்து ஒரு ட்விட்டர் பயனர் குறிப்பிடுகையில், “கூடுதல் தகவல் : மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கையில் இந்திய அரசை ஒன்றிய அரசு என்றே அனைத்து இடங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் நூற்றிற்கும் மேற்பட்ட இடங்களில் மத்திய அரசு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசு, ஒன்றிய அரசு என்று இந்திய அரசை அழைப்பதை எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை. திமுகவும் பாஜகவும் மாநில உரிமைகளைக் காப்பாற்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுப்பதை விட்டுவிட்டு மக்களை முட்டாளாக்க வேண்டாம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு ட்விட்டர் பயனர், “கர்நாடக அணை விவகாரத்தில் மத்திய அரசை தலையிட சொல்லி கெஞ்சுவது ஏனோ ? ஒன்றிய அரசின் தலையிடு வேண்டாம் என்று சொல்லி நீங்களே பேசி தீர்த்து கொள்ளலாமே ? பாவம் அவர்களும் Dhravidian stocks தானே” என்று குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.