தர்மயுத்தம் என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வம் அரங்கேற்றிய பரபரப்புக்கு இன்று வயது ஒன்று! அவரது நோக்கம் நிறைவேறியதா? என்பதே இன்று எழுந்திருக்கும் கேள்வி!
தர்மயுத்தம், திமுக.வில் இருந்து எம்.ஜி.ஆர். வெளியேற்றப்பட்டபோது பயன்படுத்திய வார்த்தை! அதே வாசகத்தை கடந்த ஆண்டு இதே நாளில் (பிப்ரவரி 7) பிரபலமாக்கினார் ஓ.பன்னீர்செல்வம்!
ஜெயலலிதா அமைச்சரவையில் இரண்டாவது இடம் வகித்தவர் ஓபிஎஸ்! ஆனால் 2016 தேர்தலுக்கு ஓரிரு மாதங்கள் முன்பிருந்தே ஓபிஎஸ்.ஸை ஓரங்கட்ட ஆரம்பித்தார் ஜெயலலிதா. அப்போதைய தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் அவர் இல்லை. ஆனாலும் தேர்தலில் சீட் கிடைத்து ஜெயித்து, அமைச்சரவையிலும் இடம் பிடித்தார்.
பழைய மாதிரி பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை என ‘வளமான’ இலாகாக்கள் இல்லாமல், நிதித்துறையை மட்டுமே அவரிடம் கொடுத்திருந்தார் ஜெயலலிதா. ஆனாலும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அந்த நேர குழப்பங்களை தவிர்க்க ஓபிஎஸ்.ஸையே முதல்வர் ஆக்க சசிகலா சம்மதித்தார். சசிகலாவுக்கும், ஓபிஎஸ்.ஸுக்கும் கடந்த 2011-க்கு பிறகு சரியான புரிதல் இல்லை என்பது பின்னர் ஓபிஎஸ்.ஸே ஒப்புக்கொண்ட உண்மை!
ஆனாலும் ஜெயலலிதாவிடம் இருந்ததுபோலவே ஓபிஎஸ் தன்னிடம் பவ்யமாக நடந்து கொள்வார் என சசிகலா எதிர்பார்த்தார். ஆனால் ஓபிஎஸ்.ஸுக்கு டெல்லி தொடர்புகள் புதுத் தெம்பைக் கொடுத்தன. ஜெயலலிதா சிறையில் இருந்தபோது இடைக்கால முதல்வராக காட்டிய பவ்யத்தை, இப்போது சசிகலாவிடம் அவர் காட்டவில்லை.
வர்தா புயல் சென்னையை உலுக்கியபோது, மக்கள் மத்தியில் தனது இமேஜை உயர்த்தும் வகையில் பம்பரமாக சுழன்றார் ஓபிஎஸ்! சசிகலாவுக்கு இது சந்தேகத்தை உருவாக்கியது. கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றிய அவர், முதல்வர் பதவியையும் கைக்குள் கொண்டு வராவிட்டால் மொத்தமும் கை மீறிவிடும் என நினைத்தார்.
எனவே தம்பிதுரை, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோரை வைத்து, ‘கட்சியும் ஆட்சியும் ஒருவரிடம் இருக்க வேண்டும்’ என பேச வைத்தார். அதன்படி ஓபிஎஸ்.ஸிடம் இருந்து வலுக்கட்டாயமாக ராஜினாமா கடிதம் வாங்கப்பட்டது. இரு நாட்கள் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் முடங்கிக் கிடந்த ஓபிஎஸ், கடந்த ஆண்டு (2017) பிப்ரவரி 7-ம் தேதி மாலை 7 மணிக்கு பிறகு மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் வந்தார்.
யாரிடமும் எதுவும் சொல்லாமல், ஜெயலலிதா நினைவிடத்தில் கண்களை மூடி தியானத்தை தொடங்கினார். ஜெயலலிதா மரணம் ஏற்படுத்தியிருந்த துக்கம், அப்பல்லோவில் ஜெயலலிதாவின் முகத்தையே வெளியே காட்டாத சசிகலா மீது மக்கள் மத்தியில் மண்டியிருந்த கோபம் எல்லாம் ஓ.பன்னீர்செல்வம் மீது ஒரு கிரேஸை ஏற்படுத்தியிருந்த நேரம் அது!
முகத்தை படு சோகமாக வைத்துக்கொண்டு ஓபிஎஸ் கண்களை மூடி தியானமிருந்தபோது, மொத்த தமிழ்நாட்டையும் சில நிமிடங்களில் தன் பக்கம் திருப்பினார் ஓபிஎஸ்! ‘சசிகலாவின் நிர்ப்பந்தத்தால் ராஜினாமா செய்தேன். சசிகலாவை பற்றி 10 சதவிகிதம் கூறியிருக்கிறேன். தேவைப்படும்போது மீதமுள்ள 90 சதவிகிதத்தை கூறுவேன்’ என்றார் ஓபிஎஸ்!
அந்த தியானத்தை தொடர்ந்து, அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஹீரோவாக உருவெடுத்தார் ஓபிஎஸ்! ஜெயலலிதா மரணத்திற்கு சிபிஐ விசாரணை கோரி தமிழ்நாடு முழுவதும் அவரது தரப்பு நடத்திய உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
‘சசிகலா குடும்பத்தை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவது, ஜெயலலிதா மரணத்திற்கு சிபிஐ விசாரணை அமைப்பது’ ஆகிய இரண்டும்தான் ஓபிஎஸ் தொடங்கிய தர்மயுத்தத்தின் கோரிக்கைகள்! இவற்றை இபிஎஸ் தரப்பு ஏற்றுக்கொண்டதால், அணி இணைப்புக்கு ஒத்துழைத்தார் ஓபிஎஸ்!
ஒரு சம்பவம் என்பது நேற்று!!
தாயின் தலைமகன் ஓபிஎஸ் அண்ணனின் தர்மயுத்தம்..
அது சரித்திரம் என்பது இன்று!!
அஇஅதிமுக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்..
அது சாதனை ஆவது நாளை!!
விரைவில் தமிழக முதலமைச்சர்..
வரும் சோதனைதான் இந்த இடைவேளை!!@OfficeOfOPS #KKSupportOPS #KKStandwithOPS pic.twitter.com/lkUGm3PqBi— Adv R.BIJI.K.ROY (@advbiji) February 7, 2018
அணிகள் இணைந்து அவர் துணை முதல்வர் ஆனது மட்டும்தான் இன்று வரை அவரது தர்மயுத்தத்தின் பலனாக இருந்து வருகிறது. ஏனென்றால், சிபிஐ விசாரணை என்கிற கோரிக்கையை அணிகள் இணைப்புக்கு பிறகு ஓபிஎஸ் தரப்பே வலியுறுத்தவில்லை. நீண்ட இழுபறிக்கு பிறகு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது.
பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவிடம் விசாரிக்கவே, ஆணையம் பெரும் நடைமுறை சிரமங்களை எதிர்கொண்டு வருகிறது, இன்னமும் லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவர்கள் ஆகியோரை இந்த ஆணையம் எப்போது விசாரிக்கும்? எப்போது அதன் பரிந்துரைகள் அரசுக்கு கிடைக்கும்? அரசு அதில் என்ன நடவடிக்கை எடுக்கும்? என்பதெல்லாம் கேள்விகளாக இருக்கின்றன.
தர்மயுத்தம் தொடங்கியதன் நோக்கம் நிறைவேறிவிட்டது - ஓபிஎஸ்
செகன்ட் பார்ட் எப்போ வரும் தலிவரே... pic.twitter.com/xU1yAu5PAZ— ???? மணி தமிழன்???? (@mani_officl) February 7, 2018
தர்மயுத்தத்தின் இன்னொரு டிமாண்டான, சசிகலா குடும்பத்தை அரசியலை விட்டு அப்புறப்படுத்தும் முயற்சிக்கு ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதியே தடை ஏற்படுத்திவிட்டது. அங்கு வென்ற டிடிவி தினகரனை நோக்கி கணிசமான நிர்வாகிகளும் தொண்டர்களும் அணி வகுக்கிறார்கள். இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பே மாவட்டத்திற்கு சராசரியாக 150 பேர் வரை நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்கி, டிடிவி தினகரன் அணிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். எனவே சசிகலா குடும்பத்தின் அரசியல் வளர்பிறையாக நகர்வதுதான் யதார்த்தம்!
இதெல்லாம் போக, டிடிவி அணியின் 18 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்த விவகாரம், ஓபிஎஸ் தரப்பு 11 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்யாத விவகாரம் ஆகியன சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்கின்றன. அதில் கிடைக்கும் உத்தரவுதான், இபிஎஸ்-ஓபிஎஸ் ஆட்சியின் ஆயுளை தீர்மானிக்கும்!
தர்மயுத்தம் முழுமையாக நிறைவேறியுள்ளது; அதிமுக, தொண்டர்கள் இயக்கமாக நிலையான ஆட்சி செய்துவருகிறது - துணை முதலமைச்சர் மாண்புமிகு ஓ.பன்னீர்செல்வம்@OfficeOfOPS ????????
— Muthu Kumar B (@MKtalkss) February 7, 2018
ஒருவேளை ஆட்சி கவிழ்ந்தால், இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக.வை எப்படி நடத்தப் போகிறார்கள்? இப்போதைய அமைச்சர்கள் பலருமே டிடிவி-யை நோக்கி ஓட்டமெடுக்காமல் இருப்பார்களா? என்பதையெல்லாம் பார்க்க வேண்டும். அதைப் பொறுத்தே ஓபிஎஸ்.ஸின் தர்மயுத்தம் எந்த அளவுக்கு சக்சஸ் என்பதை சொல்ல முடியும்!
தர்மயுத்தம் தொடங்கியதின் நோக்கம் நிறைவேறியது-OPS# துணை முதல்வர் பதவி கிடைச்சதை சொல்லுறாரு போல..!!
— யுகராஜேஸ்® (@yugarajesh2) February 7, 2018
இந்த தர்மயுத்த ஓராண்டு நிறைவை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பெருமை பொங்க கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், சமூக வலைதளங்களில் சீண்டல் மீம்ஸ்களுக்கும் பஞ்சமில்லை. தர்மயுத்தம் ஓராண்டு நிறைவு குறித்து கருத்து கூறிய ஓபிஎஸ், ‘தொண்டர்களின் இயக்கமாக அதிமுக மாறியிருக்கிறது. எனவே தர்மயுத்தம் வெற்றி பெற்றிருக்கிறது’ என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.