O Panneerselvam | Lok Sabha Election | Ramanathapuram: பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கு நீண்ட பேச்சு வார்த்தைக்குப் பிறகு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவதாக ஓ.பன்னீர்செல்வம் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.
தாங்கள் 15-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்டதாகவும், அதைவிட அதிகமான தொகுதிகளை தர பா.ஜ.க-வினர் விருப்பம் தெரிவித்ததாகவும் கூறிய ஓ.பன்னீர்செல்வம், தொண்டர்களின் பலத்தை அறிய ஒரு தொகுதியில் நிற்க முடிவு செய்துள்ளதாகவும், ராமநாதபுரத்தில் சுயேட்சை சின்னத்தில் போட்டி என்றும் தெரிவித்தார்.
சபதம்
இந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வம், நீதிக்கும் அநீதிக்கும் புறம்பாக யாரெல்லாம் செயல்படுகிறார்களோ, அவர்களுக்கு எதிராக தான் விஸ்வரூபம் எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், "ராமநாதபுரம் தொகுதி ராஜா சேதுபதி மன்னர் ஆட்சிக்கு உட்பட்டது. அங்கு வாழும் மக்கள் நீதியின்படி, தர்மத்தின் படி நீதி வழங்குவார்கள் என்பது தான் கடந்த காலங்களின் வரலாறு.
இன்றைக்கு அ.தி.மு.க தொண்டர்களின் உரிமைகளை மீட்கும் தர்ம யுத்தத்தில் ஈடுபட்டுள்ள நான், நீதி கேட்டுத்தான் போட்டியிடுகிறேன். அந்த நீதிக்கு உரிய தீர்ப்பை வழங்கும் மக்கள் ராமநாதபுரம் தொகுதி மக்கள் என எண்ணித்தான் நான் அந்த தொகுதியில் போட்டியிடுகிறேன்.
அநீதிக்கும், நீதிக்குப் புறம்பாக யாரெல்லாம் செயல்படுகிறார்களோ, அவர்களுக்கு எதிராக நான் விஸ்வரூபம் எடுப்பேன். சட்டப் போராட்டத்தில் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்" என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“