நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4 ஆம் தேதி வெளியானது. இதில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வெற்றிப்பெற்றது. வெற்றி குறித்து ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும் எனில் தேர்தல் முடிவுகள் வெளியாகி 45 நாட்களுக்குள் வழக்கு தொடர வேண்டும் என்ற விதி உள்ளது.
இந்நிலையில், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் சுயேட்சையாக போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனியின் வெற்றிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், 'ராமநாதபுரம் தொகுதியில் வெற்றிப்பெற்ற நவாஸ்கனி, வேட்புமனுவில் சொத்துக்கணக்கை முறையாக காட்டவில்லை. எனவே, அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும்,' என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ''அதிமுக தொண்டர்கள் அனைவருமே கட்சி ஒன்றிணைய வேண்டும் என கேட்கின்றனர். கட்சியில் சேர்த்துக்கொள்ளுங்கள் எனக் கேட்கவில்லை; ஒன்றிணைக்கவே கோருகின்றனர்'' என்று கூறினார்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி 5.09 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 3.42 லட்சம் வாக்குகள் பெற்றிருந்தார் ஓ.பன்னீர்செல்வம் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
இதேபோல், திருநெல்வேலி தொகுதியின் தேர்தல் முடிவை எதிர்த்து பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரின் வெற்றியை எதிர்த்து தே.மு.தி.க வேட்பாளர் விஜய பிரபாகரனும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“