/tamil-ie/media/media_files/uploads/2017/08/cm-ops.jpg)
O.Panneerselvam first time separate statement in ADMK Letter Head
ச.செல்வராஜ்
ஓ.பன்னீர்செல்வம் முதல் முறையாக அதிமுக லெட்டர் ஹெட்டில் எடப்பாடி பழனிசாமியை தவிர்த்துவிட்டு தனியாக அறிக்கை விட்டிருக்கிறார். கட்சி வட்டாரத்தில் இது ஹாட் டாக்!
ஓ.பன்னீர்செல்வம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். ஆனாலும் ஒரு கிளைச் செயலாளரைக் கூட நீக்கவோ, சேர்க்கவோ தனிப்பட்ட முறையில் இந்தப் பதவிக்கு அதிகாரம் கிடையாது.
ஓ.பன்னீர்செல்வத்துடன் அதிமுக.வின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமியும் கையெழுத்திட்டால்தான் அது செல்லுபடியாகும். எனவே இபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் இணைந்தது முதல் கட்சி சார்ந்த எந்த அறிக்கையாக இருந்தாலும் இருவரும் இணைந்து கையெழுத்திட்டே வெளிவரும்.
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையெழுத்திடாத பட்சத்தில் சில அறிவிப்புகளை ‘அதிமுக தலைமைக் கழக அறிவிப்பு’ என்ற பெயரில் கட்சியின் லெட்டர் ஹெட்டில் வெளியிடுவார்கள். ஆனால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருமே தலைமைக் கழக லெட்டர் ஹெட்டில் தனியாக அறிக்கை விடுவதை தவிர்த்தே வந்தனர்.
இதைத் தாண்டி பிரதமருக்கு வாழ்த்து கூறுவது, திருவிழாக்களையொட்டி பொதுமக்களுக்கு வாழ்த்து கூறுவது ஆகியவைகளுக்கு இருவருமே கட்சி லெட்டர் ஹெட்டை பயன்படுத்தாமல் தனித்தனியாக ட்விட்டர் மூலமாகவோ அல்லது முதல்வர் மற்றும் துணை முதல்வர் என்ற அடிப்படையில் கடிதங்கள் மூலமாகவோ தெரியப்படுத்தி வந்தனர்.
இந்த நடைமுறையை முதல்முறையாக இன்று (ஜூன் 15) ரம்ஜான் வாழ்த்து அறிக்கை மூலமாக ஓ.பன்னீர்செல்வம் தகர்த்து எறிந்திருக்கிறார். அதிமுக தலைமைக்கழக லெட்டர் ஹெட்டில் அவரே தனியாக இன்று வாழ்த்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் தனது பெயருக்கு கீழே அதிமுக ஒருங்கிணைப்பாளர், கழக பொருளாளர், துணை முதல்வர் ஆகிய 3 பொறுப்புகளையும் குறிப்பிட்டிருக்கிறார்.
ரம்ஜான் திருநாள் வாழ்த்துச் செய்தி. pic.twitter.com/W9dZTBKrYy
— O Panneerselvam (@OfficeOfOPS) 15 June 2018
ஓ.பன்னீர்செல்வம் இந்த அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறார். அதில், ‘ஈகைத் திருநாளான ரம்ஜான் பண்டிகையை இனிதே கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த இனிய நல்வாழ்த்துக்கள். இருப்போர் இல்லாதோர் என்ற பாகுபாடுகளை மறந்து எல்லாரும் பகுத்துண்டு இன்பம் காணும் பெருநாள் ரம்ஜான் திருநாள்.
சிறுபான்மை மக்கள் மீது மிகுந்த அக்கறை காட்டி, இஸ்லாமியப் பெருங்குடி மக்களின் வாழ்வில் வளம் சேர்த்து, இஸ்லாமிய சமுதாயத்தின் பாதுகாவலராக என்றும் விளங்கிய மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களை நினைவு கூர்ந்து, இறைத் தூதர் நபிகள் நாயகத்தின் போதனைகளான ஈகை, கருணை, அன்பு, மனிதநேயம், சினம் கொள்ளாமை போன்ற நற்குணங்களை கடைபிடித்து உலகில் அமைதியும் சமாதானமும் தழைத்திட நாம் உறுதியேற்போம்.
இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் திருநாள் வாழ்த்துக்களை மீண்டும் உரித்தாக்கிக் கொள்கிறேன்’ என கூறியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.
இந்த அறிக்கையில் எந்த இடத்திலும் அதிமுக சார்பில் வாழ்த்து கூறுவதாக ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிடவில்லை. ‘எனது உளமார்ந்த நல் வாழ்த்துகள்’ என்றே குறிப்பிட்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி தனியாக முதல்வர் என்ற முறையில் ரம்ஜான் வாழ்த்து கூறி அறிக்கை விட்டார். ஆனால் அவர் தலைமைக்கழக லெட்டர்ஹெட்டை பயன்படுத்தவில்லை.
அதிமுக.வைப் பொறுத்தவரை கூட்டுத் தலைமை என பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டு, அதற்கு அண்மையில் இந்திய தேர்தல் ஆணையமும் அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தேர்தல் ஆணையத்தில் ஒப்புதல் கிடைத்த கையுடன் ஓ.பன்னீர்செல்வம் தனிக் கச்சேரியை ஆரம்பித்துவிட்டாரா? என கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரும் ஆரம்பம் முதல் எடப்பாடி பழனிசாமியின் விசுவாசிகளாகவே இருந்து வந்தனர். கட்சி சம்பந்தமான கூட்டங்களுக்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் வந்தால்கூட அங்கு எடப்பாடிக்கே முன்னுரிமை கிடைத்து வந்தது. எடப்பாடியின் கார் மட்டுமே அலுவலக வளாகத்திற்குள் வந்து நிற்கும்.
அந்த அளவுக்கு எடப்பாடி பழனிசாமியின் விரல் அசைவுக்கு கட்டுப்பட்டிருந்த தலைமைக் கழகத்தில் சமீப நாட்களாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டதாக கூறுகிறார்கள். கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமி அங்கு ரெகுலராக செல்லத் தொடங்கிய பிறகே இந்த மாற்றம் என்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இடையே அவ்வப்போது உருவெடுக்கும் அதிகார யுத்தத்தின் எதிரொலியே இந்த தனி அறிக்கை என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. முக்கியமான ஆலோசனைக் கூட்டங்கள், அரசு நிகழ்ச்சிகளில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எடப்பாடி பழனிசாமி முக்கியத்துவம் கொடுக்காத கோபமும் இப்படி தனி அறிக்கையாக வந்ததாக சொல்கிறார்கள்.
குறிப்பாக 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு வந்த அன்று சட்டமன்றம் நடந்து கொண்டிருந்தது. தீர்ப்புக்கு சில மணி நேரம் முன்னதாக தலைமைச் செயலகத்தில் தனது அறைக்கு அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயனை அழைத்துப் பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
மூத்த அமைச்சரான செங்கோட்டையனும் சபை நடவடிக்கைகளை தவிர்த்துவிட்டு அந்த ஆலோசனையில் கலந்து கொண்டார். ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தை அந்த ஆலோசனைக்கு அழைக்கவில்லை. இந்தக் கோபமும் ஓபிஎஸ் தரப்புக்கு இருப்பதாக தெரிகிறது.
இந்த தனிக் கச்சேரி தொடருமா? அல்லது, பேசி ஒரு முடிவுக்கு வருவார்களா? என்பது அடுத்தடுத்த நிகழ்வுகளில் தெரியும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.