இபிஎஸ்.ஸை நீக்கிவிட்டு தன்னை முதல்வர் ஆக்க ஓபிஎஸ் விண்ணப்பம்? ப.சிதம்பரம் 'ஸ்கூப்’ ட்வீட்

இபிஎஸ்.ஸை நீக்கிவிட்டு தன்னை முதல்வர் ஆக்குவதற்கு ஓ.பன்னீர்செல்வம் விண்ணப்பம் செய்கிறாரா? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.

இபிஎஸ்.ஸை நீக்கிவிட்டு தன்னை முதல்வர் ஆக்குவதற்கு ஓ.பன்னீர்செல்வம் விண்ணப்பம் செய்கிறாரா? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுக.வுக்கு இரட்டைத் தலைமையாக திகழ்கிறார்கள். பாஜக மேலிடத்தை கவர்வதில் இவர்கள் இடையே மறைமுகப் போட்டி நடப்பதாக எப்போதும் விமர்சனம் உண்டு. ‘மோடி கூறியதால்தான் அணிகள் இணைப்புக்கு சம்மதித்து, துணை முதல்வர் பொறுப்பை ஏற்றேன்’ என ஒருமுறை ஓ.பன்னீர்செல்வம் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

கர்நாடகா தேர்தல் முடிவுகள் நேற்று (மே 15) முழுமையாக வெளியாகும் முன்பே ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கும், பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு கடிதம் மூலமாக வாழ்த்து தெரிவித்தார். அந்தக் கடிதங்களை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவு செய்தார். அமித்ஷாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் கர்நாடகா வெற்றியை, ‘தென் இந்தியாவில் பிரமாண்டமான நுழைவு’ என வர்ணித்தார்.

பாஜக தலைவர்களே இந்த அளவுக்கு இந்த வெற்றியை வர்ணிக்கவில்லை. அதன்பிறகு எடப்பாடி பழனிசாமியும், மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததாக செய்தி வெளியிட்டார். ஆனால் மாலையில் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பாஜக.வுக்கே அங்கு நிலவரம் உவப்பாக இல்லை. இன்னமும் அங்கு ஆட்சி அமைக்க இழுபறி நீடிக்கிறது.

இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்தது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். அதில், ‘கர்நாடகாவில் பாஜகவின் தேர்தல் சாதனையை ‘தென்னிந்தியாவில் பிரம்மாண்டமான நுழைவு’ என்று ஓபிஎஸ் வரவேற்றிருப்பது ஏன்? இந்தி திணிப்பை வரவேற்கிறாரா? அல்லது காவிரி ஆணைய மறுப்பை வரவேற்கிறாரா? இல்லை, இபிஎஸ் அவர்களை நீக்கிவிட்டு தன்னை முதலமைச்சராக நியமிக்க விண்ணப்பம் போடுகிறாரா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேபோல பாஜக வெற்றி உறுதி ஆகும் முன்பே திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியதும் சர்ச்சை ஆகியிருக்கிறது.

 

×Close
×Close