தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான அதிமுகவில் கடந்த சில மாதங்களாக பல அதிரடி திருப்பங்கள் அரஙகேறி வரும் நிலையில், தற்போ மேலும் ஒரு திருப்பமாக எடப்பாடி அணியால் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒ.பன்னீர்செல்வம் ஜெயா தொலைக்காட்சியில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தததில் இருந்து பதவி மோதல் பெரும் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் அதிமுக ஆட்சியில் இருந்தது முதல் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகவும், ஒ.பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வந்தனர்.
ஆனால் அப்போதே இருவருக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஏற்பட்ட படுதோல்வி கட்சியில் பெரிய பிளவை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அனைவரும் ஒற்றை தலைமையை ஆதரித்தனது.
இதனைத் தொடர்ந்து கட்சியில் ஒற்றை தலைமை யார் என்பதில், எடப்படி பழனிச்சாமி வெற்றி பெற்ற நிலையில், இடைக்கால பொதுக்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இதை எதிர்த்து ஒபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியின் நியமனம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் இபிஎஸ் ஆகியோரை ஒன்றாக இருப்போம் என்று ஒபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் இந்த அழைப்பை நிராகரித்த இபிஎஸ் தரப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது.
இதனிடையே ஒபிஎஸ் சசிகலா டிடிவி ஆகிய மூவரும் அரசியலில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று தொண்டர்கள் பலர் எதிர்பார்த்து வரும் நிலையில், தற்போது அதற்காக நேரம்வந்துவிட்டதா என்று தொண்டர்களை தனது செயலின் மூலம் ஒபிஎஸ் யோசிக்க வைத்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தவுடன் அதிமுகவின் அதிகாரப்பூர்வ சேனல் ஜெயா டிவி டிடிவி தினகரன் சசிகலா பக்கம் சென்றது. இதை பயன்படுத்தாத அதிமுக ஜெ நியூஸ் என்ற புதிய சேனலை தொடங்கியது. இதனிடையே ஜெயா டிவி தொடங்கி 24-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இந்த நாளை கொண்டாடும் விதமாக ஒ.பன்னீர்செல்வம் ஜெயா டிவியில் பேசியுள்ளார். இத்தனை ஆண்டுகளாக ஜெயா தொலைக்காட்சியின் வளர்ச்சிக்கு பணியாற்றிய அனைவருக்கு வாழத்துக்கள் என்று ஒ.பி.எஸ் கூறியுள்ள வீடியோ பதிவு வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த பலரும், ஒ.பி.எஸ், டிடிவி, சசிகலா மூவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் தற்போது ஒ.பி.எஸ் ஜெயா டி.வி.யில் பேசியுள்ளதை தொடர்ந்து இவர்கள் மூவரும் விரைவில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“