11 எம்.எல்.ஏ.க்கள், ஜெயலலிதா படம் வழக்குகள் : ஒரே நாளில் அதிமுக.வுக்கு இரட்டை வெற்றி

டிடிவி தினகரன் அணியின் 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கிலும் சபாநாயகரின் உத்தரவை நீதிமன்றம் அங்கீகரிக்கும் என்கிற நம்பிக்கை அதிமுக.வினருக்கு வந்திருக்கிறது.

11 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஜெயலலிதா படம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு வழக்குகளில் ஒரே நாளில் அதிமுக.வுக்கு இரட்டை வெற்றி கிடைத்திருக்கிறது.

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களான ஆறுக்குட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், கே. பாண்டியராஜன், மனோரஞ்சிதம், சரவணன், செம்மலை, சின்னராஜ், ஆர். நடராஜ் ஆகியோர் கடந்த 2017 பிப்ரவரியில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர். அவர்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டப்படி பதவி நீக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அதேசமயம் டிடிவி தினகரன் அணியின் 18 எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சாட்டி ஆளுனரிடம் மனு கொடுத்த காரணத்திற்காக அவர்கள் மீது பதவி நீக்க நடவடிக்கையை சபாநாயகர் தனபால் எடுத்தார். அந்த நடவடிக்கையை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்தச் சூழலில் திமுக கொறடா சக்கரபாணி, கட்சித் தாவல் தடை சட்டப்படி ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவரது அணியைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்கள் மீதும் நடவடிக்கை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்க பட்டியல் இடப்பட்டிருந்தது.

அதேபோல சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என அடையாளம் காட்டப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் இருந்து அகற்ற வேண்டும் என திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் தொடர்ந்த வழக்கும் விசாரணை முடிந்து தீர்ப்புக்காக இன்று பட்டியல் இடப்பட்டது.

பிற்பகல் 3.20 மணிக்கு, ‘ஜெயலலிதா படத்தை சட்டமன்றத்தில் இருந்து அகற்ற முடியாது. சபாநாயகரின் நிர்வாக அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை’ என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வு உத்தரவிட்டது.

அடுத்த 10 நிமிடங்களில் ஓபிஎஸ் அணியின் 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கிலும், ‘சபாநாயகரின் உத்தரவில் தலையிட முடியாது’ என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. இதன்படி ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களும் பதவி நீக்க ஆபத்தில் இருந்து தப்பினர்.

அதிமுக.வினரைப் பொறுத்தவரை, சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் வைக்கப்பட்டதை அங்கீகரித்து உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்று வருகிறார்கள். சட்டமன்றத்தில் இருந்து ஜெயலலிதா படத்தை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தால், அதுவே தங்களுக்கு பெரும் சங்கடமாக அமைந்திருக்கும் என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அதேபோல ஓபிஎஸ் அணியின் 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் சபாநாயகர் உத்தரவில் தலையிட முடியாது என நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, அதிமுக அரசுக்கு பூஸ்ட்! இதேபோல டிடிவி தினகரன் அணியின் 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கிலும் சபாநாயகரின் உத்தரவை நீதிமன்றம் அங்கீகரிக்கும் என்கிற நம்பிக்கை அதிமுக.வினருக்கு வந்திருக்கிறது. இந்த அடிப்படையில்தான் ஒரே நாளில் கிடைத்திருக்கும் இரட்டை வெற்றி, அதிமுக.வினருக்கு உற்சாகத்தை தருகிறது.

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close