O Panneerselvam latest tamil news: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அரசியலை ஆட்டிப் படைக்கும் அதிமுக்கிய முடிவுக்கு தயாராவதாக தகவல்கள் வெளியாகின்றன. இது தொடர்பாக அவர் வெளியிட்ட ‘ட்வீட்’ பெரும் விவாதங்களை உருவாக்கியிருக்கிறது.
முதல்வர் வேட்பாளர் சர்ச்சை, அதிமுக.வை உலுக்கி வருகிறது. செப்டம்பர் 28-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செயற்குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்கள், ‘எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும்’ என வலியுறுத்தினர். அக்டோபர் 7-ம் தேதி இது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பதாக அன்று இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அக்டோபர் 6-ம் தேதியே அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சென்னையில் இருக்கும்படி இபிஎஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் துணை முதல்வர் ஓ.பி.எஸ், சொந்த ஊரான தேனிக்கு சென்றுவிட்டார். அங்கு பெரியகுளத்தில் தனது பண்ணை வீட்டில் பலருடனும் ஆலோசனை நடத்தி வருகிறார்.
முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிப்பதில் ஓபிஎஸ்.ஸுக்கு உடன்பாடு இல்லை என்றே தெரிகிறது. ஒருவேளை அதற்கு சம்மதிக்க வேண்டுமென்றால், கட்சியை நடத்தும் முழுமையான அதிகாரத்தை தனக்கு தரவேண்டும் என அவர் கேட்பதாக தகவல்கள் வருகின்றன.
முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக்கு கெடு நெருங்கி வரும் சூழலில், இன்னமும் இதில் ஒரு முடிவை அதிமுக எட்டியதாகத் தெரியவில்லை. இந்தச் சூழலில் இன்று (5-ம் தேதி) காலையில் ஓபிஎஸ் வெளியிட்ட ட்வீட்டில், ‘தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும்.
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!!
எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!!’ என கீதை வரிகளை எடுத்து பதிவிட்டிருக்கிறார் ஓபிஎஸ்.
இந்தப் பதிவின் மூலமாக முக்கியமான ஒரு முடிவுக்கு ஓபிஎஸ் வர இருப்பதாகக் கூறப்படுகிறது. 2017-ல் தர்மயுத்தம் நடத்தியபோது கிடைத்த ஆதரவு இப்போது ஓபிஎஸ்.ஸுக்கு கிடைக்குமா? என்பது பெரிய சந்தேகம். ஏனெனில் அப்போது, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என்பதை பிரதான அஸ்திரமாக ஓபிஎஸ் பயன்படுத்தினார். ஆனால் இப்போது பிரச்னை பதவி ரீதியிலானது.
தவிர, முந்தைய தர்மயுத்த கோரிக்கையின்படி அமைக்கப்பட்ட ஆறுமுகச்சாமி ஆணையம் பலமுறை சம்மன் அனுப்பியும் ஓபிஎஸ் ஆஜராகவில்லை. ஆட்சியில் இடம் பெற்ற பிறகு, ஜெ. மரணத்திற்கு சிபிஐ விசாரணை கோரிக்கையையும் கைவிட்டார். பரவலாக அவரை நம்பிச் சென்ற ஆதரவாளர்களுக்கு அவர் பெரிதாக உதவி செய்யவில்லை என்கிற குமுறலும் இருக்கிறது. எனவே தர்மயுத்தம் 2.0-வுக்கான வாய்ப்பு குறைவு.
அதேசமயம், முதல்வர் வேட்பாளர் அறிவிப்பை இன்னும் தள்ளிப் போக வைக்கும் அளவுக்கு ஒத்துழையாமை இயக்கத்தை கட்சிக்குள் ஓபிஎஸ் முன்னெடுக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு செய்யவேண்டிய 7-ம் தேதி நெருக்கத்தில் அவர் சொந்த ஊரில் முகாமிட்டிருப்பது அதையே காட்டுவதாக குறிப்பிடுகிறார்கள் அந்த விமர்சகர்கள்.
ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ்.ஸை தவிர்த்துவிட்டு, உயர்மட்ட நிர்வாகிகளையோ மாவட்டச் செயலாளர்களையோ பொதுக்குழுவையோ இபிஎஸ் கூட்டிவிட முடியாது. கீதையின் வரிகளை தன் ட்வீட்டில் சுட்டிக்காட்டியிருக்கும் ஓபிஎஸ், கீதையை மிக நேசிக்கும் டெல்லி வாலாக்களின் சிக்னலுக்கு காத்திருப்பதாகவும் ஒரு தகவல் இருக்கிறது. தர்மயுத்தம், இந்த முறை ஒத்துழையாமை என்கிற அடிப்படையிலான மெளன யுத்தமாக இருக்கலாம்.
இபிஎஸ் தரப்பில் இதை எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரியும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"