அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதிய வழக்கு தொடர்ந்துள்ளார். அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்த நிலையில் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். கடந்தாண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுவை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், பொதுக்குழு செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தநிலையில், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் வரும் 26-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தேர்தல் நடத்துவதை எதிர்த்து ஓ.பி.எஸ் தரப்பில் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்க, ஜேசிடி பிரபாகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தனர். ஞாயிற்றுக்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தபோது அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்தலாம் என்றும் தேர்தல் முடிவுகளை வெளியிடக் கூடாது என்றும் உத்தரவிட்டப்பட்டது.
அத்துடன் அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான வழக்கு விசாரணை வரும் 22-ந் தேதி முதல் விசாரிக்கப்பட்டு மார்ச் 24-ல் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் உத்தரவிடப்பட்டது.
இதனிடையே அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தம்மை நீக்கியதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் விசாரிக்க வலியுறுத்தப்பட்டது. இதனை ஏற்று மார்ச் 23-ந் தேதி சசிகலா வழக்கு விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/