O Panneerselvam | Aiadmk | Lok Sabha Election 2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பா.ஜ.க சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இந்த நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் உள்ள செவன்த் டே மெட்ரிக் பள்ளியில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன்கள் ரவீந்திரநாத், இளைய மகன் ஜெய பிரதீப் ஆகியோர் தங்களது வாக்கினைச் செலுத்தினர்.
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "பத்து ஆண்டுகளாக நல்லாட்சி புரிந்த பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வருவார் என கருத்து கணிப்புகள் வருகின்றன. ராமநாதபுரம் தொகுதியில் எனக்கு வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது தான்.
இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி எங்கு உள்ளார் என்றே தெரியவில்லை. கான்ட்ராக்டர்களுக்காக கட்சி நடத்துகிறார் எடப்பாடி என்று அண்ணாமலை கூறியது நூற்றுக்கு நூறு உண்மை. தற்போது உள்ள வேட்பாளர்கள் யாரும் அ.தி.மு.க உறுப்பினர்கள் இல்லை. 2024 தேர்தல் முடிவில் அ.தி.மு.க ஓ.பி.எஸ், டி.டி.வி தினகரன் கைக்கு வரும் என்று அண்ணாமலை கூறியுள்ளார். நிச்சயமாக அ.தி.மு.க எங்கள் வசம் வரும். தமிழகத்தில் 2026 ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம்” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“