அதிமுக தலைமைத் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இன்று (புதன்கிழமை) அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளனர்.
மேலும் வரும் 27ம் தேதியன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தலைமைக்கழக செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக செய்தி தொடர்பாளர்கள் ஆலோசனை கூட்டம், கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சி.வி.சண்முகம் பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசியிருக்கிறார். அதைப்போல சில நாட்களுக்கு முன் பேட்டி ஒன்றில் எடப்பாடி பழனிசாமி எங்கள் கட்சியின் கொள்கை வேறு; பாஜகவின் கொள்கை வேறு; நாங்கள் வேறு; அவர்கள் வேறு என்று பேசினார்.
குஜராத் முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு வந்தது. அதனைத் தொடர்ந்து பதவியேற்பு விழாவில் அவர் கலந்து கொண்டார். ஆனால், எடப்பாடி வேண்டுமென்றே அங்கே செல்லவில்லை.
குஜராத்தில் தமிழகத் தலைவர்களைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்த மோடி, அவ்வளவு பேர் கூடியிருந்த அந்தக் கூட்டத்தில் ஓபிஎஸ் எங்கே என்று கேட்டுள்ளார். அங்கே நின்ற ஏ.சி.சண்முகம் தொலைவில் நின்ற பன்னீர்செல்வத்தைக் கூப்பிட்டுள்ளார். ஆக, மரியாதை அங்கு யாருக்குக் கிடைத்தது என்பது மிக முக்கியம்.
பாஜகவிடம் இருந்து ஒட்டுமொத்தமாக நாங்கள் விலகி விட்டோம் என்பதை தான், சி.வி.சண்முகத்தின் பேச்சின் மூலம் எடப்பாடி பழனிச்சாமி உணர்த்தி இருக்கிறார். எடப்பாடியின் ஆதரவு இல்லாமல் இவர் இப்படிப் பேசுவாரா என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால், நாங்கள் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
4 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் போது பா.ஜ.க. கூட்டணி தேவைப்பட்டது. ஆட்சியில் இல்லை என்றதும் தேவைப்படவில்லை. அன்று அ.தி.மு.க.வில் ஒற்றுமை தேவைப்பட்டது. இப்போது திடீர் கோபம் ஏன் என்பதை எடப்பாடி பழனிசாமி தெளிவுப்படுத்த வேண்டும். ஓ.பி.எஸ் மீது பிரதமர் மோடி மிகுந்த மரியாதை வைத்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தை பா.ஜ.க. மரியாதையோடு நடத்துகிறது. ஊழல்வாதிகளோடு கூட்டணி இல்லை என்பது தான் பா.ஜ.க.வின் முடிவு. இதில், அண்ணாமலை நல்ல முடிவை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“