பொன்.ராதா சொல்வது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் - ஓ.பன்னீர்செல்வம்

இந்தியாவிலேயே சட்டம்-ஒழுங்கு சீராக இருப்பது தமிழ்நாட்டில் தான்

கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிரூபர்களிடம் பேசுகையில், “தமிழகம் தற்போது அமைதியாக இருப்பதாக பலர் கூறி வருகிறார்கள். ஆனால் அப்படி இல்லை. பயங்கரவாதிகளின் கூடாரமாக தமிழகம் மாறி உள்ளது.

பலர் இங்கு ஒளிந்து கொண்டு நாசவேலையில் ஈடுபட பயிற்சி பெற்று வருகிறார்கள். அது உளவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்தும் அவர்கள் அரசுக்கு அறிக்கை கொடுப்பது இல்லை. அதுபோன்று அரசுக்கும் தெரிந்தாலும் அவர்கள் நடவடிக்கை எடுப்பதுஇல்லை.

மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள், தமிழ்தேச தீவிரவாதிகள் உள்பட அனைத்து தீவிரவாத அமைப்புகளும் ஒன்று சேர்ந்துள்ளது. இது தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதே தெளிவாக தெரிந்தது.
ஆனால், ஆட்சியில் இருப்பவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை. அது அவர்களுக்கே ஆபத்தாக முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். திராவிட கட்சிகள் கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை அழித்துவிட்டனர்” என்றார்.

ஆனால், இதுகுறித்து பதில் அளித்துள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், “மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சொல்லி இருப்பது உண்மைக்கு மாறானது. அது ஜமுக்காளத்தில் வடி கட்டிய பொய். இந்தியாவிலேயே சட்டம்-ஒழுங்கு சீராக இருப்பது தமிழ்நாட்டில் தான். தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழும் மாநிலமாக உள்ளது. பல்வேறு மாநிலங்களின் சட்டம்- ஒழுங்குடன் இதை ஒப்பிட்டு பார்த்தால் தெரியும்” என்றார்.

×Close
×Close