ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனது தரப்பில் அறிவித்த வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓ. பன்னீர்செல்வம், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கச் செல்வதற்கு முன்பு முறையாக அறிவிப்பேன்” என்று தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு புறப்பட்டார். அவருடன் முன்னாள் அமைச்சர் குப.கிருஷ்ணன், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பின்னர் திரும்ப பெறப்பட்ட செந்தில் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் இன்றுடன் (பிப். 7) நிறைவடைகிறது. ஆளும் கட்சியான தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்து, பிரச்சாரம் செய்து வருகிறார்.
அ.தி.மு.க-வில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி தரப்பில் கே.எஸ். தென்னரசும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் முருகனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இருவரும் வேட்பாளரை நிறுத்தினால் ‘இரட்டை இலை’ சின்னம் முடங்கும் வாய்ப்பு உள்ளதாகக் கூறி இரட்டை இலை சின்னத்தை தனக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்ல செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அ.தி.மு.க பொது வேட்பாளரை அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் தேர்வு செய்யலாம் என்று உத்தரவிட்டது. இதுதொடர்பான ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு, அவர்களது ஒப்புதல் கடிதங்கள் பெறப்பட்டு, அவற்றை அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் பிப்ரவரி 6-ம் தேதி டெல்லி சென்று, தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தார்.
இதனிடையே, ஓ.பி.எஸ் தரப்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாள்ர் செந்தில் முருகன், வேட்புமனுவை வாபஸ் பெறுவார் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு இ.பி.எஸ் தரப்பில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னை விமான நிலையம் செல்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கச் செல்வதற்கு முன்பு முறையாக அதுகுறித்து அறிவிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“