அ.தி.மு.க-வில் சேர்க்க வேண்டும் என்றால், ஓ.பி.எஸ் 6 மாதம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தால், எடப்பாடி பழனிசாமியிடம் பேசி முயற்சி செய்கிறோம் என்று ராஜன் செல்லப்பா கூறிய நிலையில், “எனக்காக யாரும் பரிந்துபேசத் தேவையில்லை; அ.தி.மு.க-வில் சேர்க்கும்படி யாரிடமும் நான் சிபாரிசு கேட்கவில்லை” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அதிமுக-வில் உரிமை கோரி சட்டப்போராட்டங்களையும் அரசியல் நகர்வுகளை நகர்த்தி வருகிறார்.
அண்மையில், அ.தி.மு.க-வில் எந்த நிபந்தனையும் இல்லாமல் இணையத் தயார் என்று கூறினார். இதற்கு, அ.தி.மு.க-வைச் சேர்ந்த ராஜன் செல்லப்பா, ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க-வில் சேர்க்க வேண்டும் என்றால், அவர் 6 மாதம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தால், எடப்பாடி பழனிசாமியிடம் பேசி சேர்க்க முயற்சி செய்கிறோம் என்று கூறினார்.
இந்நிலையில், “எனக்காக யாரும் பரிந்துபேசத் தேவையில்லை; அ.தி.மு.க-வில் சேர்க்கும்படி யாரிடமும் நான் சிபாரிசு கேட்கவில்லை” என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மேலும், என் விஸ்வாசத்திற்கு நற்சான்று தந்தவர் ஜெயலலிதா என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: “விசுவாசத்தை பொறுத்தவரை ஜெயலலிதா எனக்கு நற்சான்றிதழ் கொடுத்துள்ளார். அ.தி.மு.க-வில் பிரச்னையை யார் உருவாக்கினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அ.தி.மு.க-வில் பிரிந்து கிடக்கின்ற அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்தால்தான், தி.மு.க-வை எதிர்த்து போராடும் சக்தி கிடைக்கும்.
6 மாதம் அமைதியாக இருந்தால் எடப்பாடி பழனிசாமியிடம் பேசுவதாக ராஜன் செல்லப்பா கூறியிருந்தார். ராஜன் செல்லப்பாவின் சிபாரிசு தேவையில்லை. அவர் பரிந்துரை செய்ய வேண்டியதில்லை. எனக்காக யாரும் பரிந்துபேசத் தேவையில்லை. என்னை அ.தி.மு.க-வில் சேர்க்கும்படி யாரிடமும் நான் கேட்கவில்லை. இதற்காக யார் வீட்டு வாசலிலும் நான் நிற்கவில்லை. என் மகனுக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுக்கச் சொன்னதே ஜெயலலிதாதான்.
ஆர்.பி உதயகுமார் அ.தி.மு.க-வில் என்ன நிலையில் இருந்தார் என்று நான் கூறினால் அரசியல் நாகரீகமாக இருக்காது. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க டெபாசிட் இழந்ததற்கு முழு காரணகர்த்தா அவர்தான். என்னை பற்றியோ, என் குடும்பத்தை பற்றியோ பேசுவதை உதயகுமார் நிறுத்திக் கொள்ள வேண்டும். இருமொழிக் கொள்கையையே அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பின்பற்றி வந்தனர். இருமொழிக் கொள்கையையே தமிழக மக்கள் உயிர்மூச்சாக கொண்டுள்ளனர்” என்று ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.