நீங்கள் பா.ஜ.க கூட்டணியில்தான் இருக்கிறீர்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீசெல்வம், அவர்களாக முறித்துக்கொள்ளும் வரை பா.ஜ.க கூட்டணியில் தொடர்வேன் என்று வியாழக்கிழமை மதுரையில் கூறினார்.
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீசெல்வம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மணிப்பூரில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஆதிவாசி பெண்கள் 2 பேரை கொடூரமான முறையில் 2 மாதங்களுக்கு முன்பே கொலை செய்ததாகக் கூறப்படுகிறது; இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பது அந்த மாநிலத்தின் கடமை, மத்திய அரசின் கடமை ஆகும் என்று கூறினார்.
மேலும், மணிப்பூர் சம்பவம் தொடர்பாக நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தில் உங்கள் குரலை எழுப்புவீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஓ. பன்னீர்செல்வம், உறுதியாக மக்களின் கவனத்தை ஈர்க்கின்ற வகையில் நாங்கள் எடுத்து வைப்போம் என்று கூறினார்.
அ.தி.மு.க கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மு.க. ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்குவோம் என்று தவறுதலாகக் கூறியிருப்பது பற்றி செய்தியாளர்கள் கருத்து கேட்டதற்கு, இந்த கேள்வியை திண்டுக்கல் சீனிவாசனிடம் கேட்பதற்கு பதில் என்னிடம் கேட்கிறீர்கள். எங்கிருந்தாலும் அண்ணன் திண்டுக்கல் சீனிவாசன் வாழ்க என்று ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.
மோடி தலைமையில் நடைபெற்ற என்.டி.ஏ கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் 38 கட்சிகள் இடம்பெற்றன. அதில் கலந்துகொள்வதற்கு உங்களுக்கு ஏதேனும் அழைப்பு கொடுத்தார்களா? நாடாளுமன்றத் தேர்தலுக்கு எல்லா கட்சிகளும் ஆயத்தமாகிவிட்டார்கள், உங்களுடைய அடுத்த பயணம் என்ன என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், “எனக்கு அழைப்பு வரவில்லை, அதனால், நான் செல்லவில்லை.” என்று கூறினார்.
இன்னும் நீங்கள் பா.ஜ.க கூட்டணியில்தான் இருக்கிறீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “நான் உள்ளபடியே, அவர்களாக முறித்துக்கொள்ளும் வரை, நான் அந்த கூட்டணியில் தொடர்வேன்.” என்று கூறினார்.
தி.மு.க அமைச்சர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை நடத்தும் சோதனைகள் கூறித்து கருத்து தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், “அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தால் அதை எதிர்கொண்டு வெற்றி அடைய வேண்டியது அவர்களின் கடமை.” என்று கூறினார்.
பா.ஜ.க எங்களை பயமுறுத்தி எங்கள் கடமையை செய்யவிடாமல் செய்கிறது என்று மு.க. ஸ்டாலின் கூறிருப்பது குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டதற்கு, “ஸ்டாலின் அவர் செய்ய வேண்டிய கடமையை செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர்களை எந்த கடமையை செய்யவிடவில்லை” என்று கேள்வி எழுப்பினார்.
பா.ஜ.க அமலாக்கத்துறையை வைத்து தி.மு.க அமைச்சர்களை பயமுறுத்துகிறார்கள் என்பது குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டதற்கு, “எல்லா அரசாங்கமும் செய்வதைத்தான் அவர்களும் செய்கிறார்கள். ஸ்டாலினும் செய்கிறார். அவரும் (மோடி) செய்கிறார்” என்று கூறினார்.
காங்கிரஸ் இதற்கு முன்னர் யு.பி.ஏ என்று கூட்டணிக்கு பெயர் வைத்திருந்தது. இப்போது, INDIA என்று பெயர் வைத்துள்ளார்கள், இதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன என்ற கேள்விக்கு, கூட்டணிக்கு பெயர் இந்தியா என்று பெயர் வைத்திருக்கிறார்கள். நல்ல தலைப்புதான். இந்த கூட்டணியை உள்ளபடியே வரவேற்கிறேன்.” என்று கூறினார். மேலும், தனது மகன் ஓ.பி. ரவீந்திரநாத் எம்.பி பதவி தகுதி இழப்பு செய்யப்பட்ட உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”