அ.தி.மு.க-வில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் அடுத்தடுத்த பரிணாமங்களை அடைந்து வரும் நிலையில், “அ.தி.மு.க பிரச்னையில் அ.தி.மு.க ஒன்றுபட வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் விருப்பம்” என்று ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க-வில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இரண்டு தரப்புமே போட்டியிட முயற்சி செய்து வருகின்றனர். இரு தரப்புமே பா.ஜ.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவை கேட்டு தலைவர்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஓ. பன்னீர்செல்வம், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகத்தை நேரில் சந்தித்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு ஆதரவு கோரினார். பின்னர் ஓ. பன்னீர்செல்வம், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, அ.தி.மு.க தொண்டர்களின் மனநிலையைப் புரிந்துகொள்ளாமல், நீங்களும் எடப்பாடி பழனிசாமியும் பா.ஜ.க-விடம் சென்று கூட்டணி பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஓ. பன்னீர்செல்வம், “பிரிந்துள்ள அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்பதே அ.தி.மு.க தொண்டர்களின் மனநிலை, நிலைப்பாடு” என்று கூறினார்.
“அ.தி.மு.க-வில் அனைத்து நிலைகளிலும் பிரிந்து இருக்கக் கூடியவர்கள் ஒன்று சேர வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. தொண்டர்களின் நிலைபாடு.” என்று ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.
அ.தி.மு.க ஒன்று சேர வேண்டும் என்பதையே பா.ஜ.கவும் விரும்புவதை களத்தில் பார்க்க முடிகிறது. அ.தி.மு.க ஒற்றுமையாக இருந்தால் தி.மு.க-வை வீழ்த்துவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று ஹெச். ராஜாவும் கூறியுள்ளார் என்று செய்தியாளர்கள் கூறியதற்கு, பதிலளித்துப் பேசிய ஓ. பன்னீர்செல்வம், “உறுதியாக பாரதப் பிரதமர் மோடியும் அந்த நிலையில்தான் இருக்கிறார். அ.தி.மு.க ஒன்றுபட்டு தேர்தல் களத்தில் நிற்க வேண்டும் என்று பிரதமர் மோடியும் விரும்புகிறார். நாங்களும் விரும்புகிறோம். அதற்கு யார் மறுப்பு தெரிவிக்கிறார்கள் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.” என்று கூறினார்.
இரண்டு அணியும் இணைய வேண்டும் என்று பிரதமர் மோடி உங்களிடம் எப்போது கூறினார் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஓ.பி.எஸ், “எங்களை சந்திக்கும்போது எல்லாம் அவர் தன்னுடைய விருப்பத்தை சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்.” என்று கூறினார்.
பிரதமர் மோடி இரண்டு அணிகளும் இணைய வேண்டும் என்று சொல்கிற சூழ்நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு, அ.தி.மு.க உள்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை என்ற கருத்தை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்கிறார்கள். இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ஒரு பெரிய மனுஷன் நல்லது சொன்னால் கேட்கனும்” என்று ஓ.பி.எஸ் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"