அ.தி.மு.க மீண்டும் ஒன்றிணைந்தால் ஆட்சியை பிடிக்கலாம் என்பது தொண்டர்கள் மற்றும் மக்களின் எண்ணமாக இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மரியாதை செலுத்தும் விதமாக அவரது நினைவிடத்திற்கு, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வருகை தந்திருந்தார். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது, அ.தி.மு.க மீண்டும் ஒன்றிணைந்தால் மட்டுமே தேர்தலில் வெற்றிபெற முடியும் என பொதுமக்களும், உண்மையான அ.தி.மு.க தொண்டர்களும் நினைப்பதாக அவர் கூறினார். குறிப்பாக, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் அ.தி.மு.க-வை யாரும் வெல்ல முடியாத இடத்தில் நிறுத்தினர் எனவும், அதனை காப்பாற்ற வேண்டியது தொண்டர்களின் கடமை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக அ.தி.மு.க இணைய வேண்டுமென, தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மூலம் தாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக ஓ.பி.எஸ் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டது குறித்து ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அதன்படி, தான் சுயேட்சை வேட்பாளராக பலாப்பழ சின்னத்தில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட போது, சுமார் 3 லட்சத்திற்கு அதிகமான வாக்குகள் பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிலேயே அதிகளவிலான வாக்குகள் பெற்ற சுயேட்சை வேட்பாளர்களில் தானும் ஒருவர் எனக் கூறிய ஓ.பி.எஸ்., தன்னை தோற்கடிக்க பல சூழ்ச்சிகள் நடந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
பன்னீர்செல்வம் எனப் பெயர் கொண்ட 6 பேரை வேண்டுமென்றே தேர்தலில் போட்டியிடச் செய்ததாக ஓ.பி.எஸ் கூறியுள்ளார். எனினும், தொண்டர்கள் ஆதரவு தனக்கு இருந்ததால் தான், அதிகளவு வாக்குகளை தான் பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அ.தி.மு.க இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற கருத்தை அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“